விமானதளத்தை விரிவுபடுத்தினால் உலக வரைபடத்தில் புதுச்சேரிக்கு முக்கிய இடம் கிடைக்கும்: முதல்வர் ரங்கசாமி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுபடுத்த ரூ.425 கோடி நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறும் போது உலக வரைபடத்தில் புதுவை ஒரு முக்கிய இடத்தை பெறும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாடுமுழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவையொட்டி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு கொடிக்கம்பம், மேடை, பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

காலை 9.05 மணிக்கு முதல்வர் ரங்கசாமி கார் மூலம் கடற்கரை சாலை காந்தி திடலுக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் ராஜீவ்வர்மா, டிஜிபி மனோஜ்குமார் லால் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து மேடைக்குச் சென்ற அவர் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். மீண்டும் மேடை திரும்பிய அவர் சுதந்திர தின உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் முக்கியம்சங்கள் வருமாறு: தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் திறமை இந்தியர்களுக்கு இல்லை என்றும், ஆங்கிலேயர் ஆட்சி மறைந்தால் அவர்கள் உருவாக்கிய முற்போக்கு நாகரீம் ஓர் இரவில் அழிந்துவிடும் என்றும் விடுதலைக்கு முன்பு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூறினார்கள்.

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம். நம் உணர்வில் ஊறிய தேசபக்தியால் இந்திய திருநாட்டை தனித்தன்மை மிக்க நாடாக உலகரங்கில் உயர்த்தியுள்ளோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திர சொல் நம்மிடையே சமுதாய கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டுறவினால்தான் எந்த ஒரு கற்பனையாலும், செயற்கையான சூழ்ச்சியாலும் பிரிக்கவோ, பிளக்கவோ முடியாத ஒரு பொது சாதனையாக இந்தியாவை வளமாக்கியுள்ளோம்.

கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றி உள்ளம்தோறும் தேச பக்தியை வெளிப்படுத்தினோம். தேச பக்தி என்பது நம் ஒவ்வொருவரின் உணர்விலும், கலந்தது என்பதை பெருமிதத்தோடு உலகிற்கு உணர்த்தியுள்ளோம். தேசத்தின் மாண்பை கட்டிக்காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுவை எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது. கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை மருத்துவ பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி தொடங்க அனுமதியும், நிதியும் மத்திய அரசிடம் கோரியுள்ளோம். பள்ளிக்கல்வி தரவரிசையில் புதுச்சேரி 4ம் இடத்தில் உள்ளது. நிலமற்ற ஏழை மக்களுக்கு கடந்த ஓராண்டில் 115 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இலவச அரிசி திட்டத்தின் நேரடி பண பரிமாற்றம் மூலம் அரிசிக்கு பதிலாக பணமாக மானியத் தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 186.96 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதில் மழை நிவாரணம் ரூ. 156.72 கோடியும் அடங்கும். பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுபடுத்த தமிழக பகுதியிலிருந்து 395 ஏக்கர் நிலமும், புதுச்சேரி பகுதியில் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த வேண்டும். இதற்காக ரூ.425 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறும் போது உலக வரைபடத்தில் புதுச்சேரி ஒரு முக்கிய இடத்தை பெறும். வரும் காலத்திலும் இது போன்ற புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு முனைப்பாக உள்ளது. "என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்