புதுச்சேரியில் பறிமுதல் செய்த 11 சிலைகளும் தமிழகத்துக்கு சொந்தமானவை: ஐ.ஜி. தகவல்

புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான 11 சிலைகளும் தமிழகத்துக்கு சொந்தமானவை என சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் புதுச்சேரியில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ.50 கோடி மதிப்பிலான 11 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக ரஞ்சித் (35) என்ற தச்சுத் தொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள வீட்டில் போலீஸார் இன்று (புதன்கிழமை) மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேல், "புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான 11 சிலைகளும் தமிழகத்துக்கு சொந்தமானவை.

வேலூர் மாவட்டம் மேல்பாடி கிராமத்தில் சோமநாத ஈஸ்வரன் கோயில் இருக்கிறது. இது ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலுக்கு அருகிலேயே ராஜராஜ சோழன் தனது மூதாதையருக்கும் ஒரு கோயில் எழுப்பியுள்ளார். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த 11 சிலைகளுமே அந்த இரண்டு கோயில்களில் இருந்தும் காணாமல் போனவையே ஆகும்.

இவை, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானவை. பறிமுதல் செய்யப்பட்டுள்ள சிலைகளையும் நீதிமன்றத்தில் பார்வைபடுத்திய பின்னர் சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.

சிலைகளின் விவரம்:

மகிஷாசுரமர்த்தினி சிலை ஒன்று, நடராஜர் சிலைகள் ஐந்து, சோமாஸ்கந்தர் - அம்மன் சிலை ஒன்று, சிவன் - பார்வதி திருமண கோல சிலை ஒன்று, சிவனின் சந்திரசேகரரூபம் சிலை ஒன்று, அம்மன் - சிவன் சிலை ஒன்று, பார்வதி சிலை ஒன்று ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் மிகப்பெரிய நடராஜர் சிலை ஒன்று இருக்கிறது. அதன் மதிப்பு மட்டுமே ரூ.31 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் வாக்குவாதம்:

இதற்கிடையில், சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளரின் வழக்கறிஞர் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிரான்ஸ் அரசிடம் இருந்து இந்த சிலைகளை தனது கட்சிக்காரர் வாங்கியிருப்பதாகவும் அதற்கான நீதிமன்ற உத்தரவும் இருப்பதால் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது என கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால், அவர் எதிர்ப்பையும் மீறி போலீஸார் சிலைகளை வாகனத்தில் ஏற்றினர். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறிச் சென்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட தச்சுத் தொழிலாளி ரஞ்சித்தின் மனைவி மற்றும் உறவினர்கள் வீட்டின் முன்னே கதறி அழுதனர். ரஞ்சித் அந்த சிலைகளுக்கு மரப்பெட்டிகள் மட்டுமே செய்து கொடுத்தார் அவருக்கும் சிலை கடத்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கதறினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தீனதயாள் சொன்ன முக்கிய தகவல்:

சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தீனதயாளிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த சிலைக் கலைக்கூடம் நடத்தி வரும் புஷ்பராஜன் என்பவருக்கும் சிலைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் சென்னையில் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்பேரில் புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள வீடு ஒன்றில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப் போலீஸ் படையினர் புதுச்சேரி கோலாஸ் நகரில் 3-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தி அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான 11 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வீட்டில் தங்கி இருந்த தச்சர் ரஞ்சித்குமார் (39) என்பவர் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்