“என்எல்சி-க்கு தேர்வான 299 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட இல்லாதது வேதனை” - வேல்முருகன்

By செய்திப்பிரிவு

சென்னை: “என்எல்சி பணிக்காக சமீபத்தில் தேர்வான 299 தொழிலாளர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை என்பதால், இந்நேர்முகத் தேர்வை ரத்துசெய்யவில்லையெனில் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என்எல்சி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட தேர்வு செய்யப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சி தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் மின்தேவைக்காக காமராசர் காலத்தில் உருவாக்கப்பட்டது என்எல்சி நிறுவனம். இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு 30 தமிழர் கிராம மக்கள் தங்களது நிலங்களை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்தனர்.

அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுதான். ஆனால், அப்படியான உறுதிமொழியை ஒன்றிய அரசும், என்எல்சி நிர்வாகமும் தொடர்ந்து மீறி வருவது கண்டனத்துக்குரியது. அதாவது, என்எல்சி நிறுவனத்தில் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி, அதனைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வையும் நடத்தி முடித்திருக்கிறது. இதனையடுத்து, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் மருத்துவ பரிசோதனையும் நடைபெற இருப்பதாக என்எல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

மேற்கண்ட வேலைவாய்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலை கடந்த ஜூலை 19 ஆம் தேதி என்எல்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 299 பேரும் வட இந்தியர்கள் ஆவார்கள். இதில் தமிழர் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது வேதனையானது.

தமிழகத்தில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்எல்சி நிறுவனம் நிலம் கொடுத்தவர்கள், அந்நிறுவனத்தின் பணியிலிருந்து இறந்தவரின் வாரிசுகள், பழகுனர் பயிற்சி முடித்தவர்கள் என அனைவரையும் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, பணியில் வட மாநிலத்தவர்களைத் தேர்வுசெய்து, சேர்ப்பது திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணிக்கும் செயல். இது கண்டனத்துக்குரியது. தமிழர்களிடம் பிச்சை எடுத்து நிறுவப்பட்ட என்எல்சி நிறுவனத்தில், தொடர்ச்சியாக திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்கு இன்றளவும் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி வழங்கப்படாமலும் திட்டமிட்டு என்எல்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர்.

தொழில், வணிகம், வேலை வாய்ப்பு போன்ற பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளில் அந்தந்த மொழித் தாயகத்தில் அந்தந்த மொழி மாநிலத்தவர்க்கு முன்னுரிமையும் முழு வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகத் தமிழகத்தில் ஒன்றிய அரசுத் துறைகளில் தமிழர்களைப் புறக்கணித்து, பிறமாநில இளைஞர்களை முறையற்ற வழிகளில் ஒன்றிய அரசு திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, என்எல்சி நிறுவனம் பொறியாளர் வேலைவாய்ப்பிற்கு நடத்திய நேர்முகத்தேர்வை ரத்து செய்து, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடக்க உள்ள ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனையை உடனடியாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், தமிழக இளைஞர்கள், ஒருமித்த கருத்துள்ள அரசியல் அமைப்புகளை ஒன்று திரட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

தமிழர்களின் வாழ்வுரிமை பறிபோகும் இந்த அநீதியைத் தடுக்க தமிழ்நாடு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதோடு, என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழக இளைஞர்களுக்கும், நிலம், வீடுகளை வழங்கிய வாரிசுகளுக்கும், தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்