மின்சார மீட்டருக்கு வாடகையா?- மக்களை பாதிக்கும் முடிவை கைவிடுக: அன்புமணி ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா? மக்களை பாதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனி பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ரூ.350 வீதமும் வாடகை வசூலிக்கப்படவுள்ளது. இது மக்கள் மீதான பொருளாதார தாக்குதல் ஆகும்.

மின்சாரக் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை கடந்த 18-ஆம் தேதி வெளியிட்ட மின்துறை அமைச்சர், ஒருபுறம் மின் கட்டணம் குறைந்த அளவில் உயர்த்தப்படும் நிலையில், மறுபுறம் நுகர்வோரிடம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 50 வரையிலான நிலைக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ரூ.50 கட்டணத்தை ரத்து செய்ததை கொண்டாட்டமாக அறிவித்து விட்டு, யாருக்கும் தெரியாமல் ரூ.350 கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல.

தமிழகத்தில் இதுவரை மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கப்பட்டதில்லை. ஆனால், தமிழ்நாடு மின்சார விநியோக விதி 5(11)-இன்படி மீட்டருக்கு வாடகை வசூலிக்கப்படவிருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்த விதிகள் 2004-ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டாலும் கூட, மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்க முடியும் என்று எந்த விதியிலும் நேரடியாக தெரிவிக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, மின்சாரம் வழங்குவது மின்சார வாரியத்தின் சேவை. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கணக்கிட வேண்டியது மின்சார வாரியத்தின் பணி. அதற்கான செலவுகளை மின்சார வாரியம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர மக்கள் மீது சுமத்தக்கூடாது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதென்பது மின் வாரியத்தின் வருவாயை பெருக்குவதற்காகவும், இழப்பை குறைப்பதற்காகவும் செய்யப்படும் சீர்திருத்தம் ஆகும். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 25 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அவை அனைத்தையும் ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றுவதற்கு ரூ.65,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2.37 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ள நிலையில் அவற்றை மாற்ற அதிகபட்சமாக ரூ.6,000 கோடி செலவாகக்கூடும். அவ்வாறு செய்வதன் மூலம் மின்சாரப் பயன்பாடு துல்லியமாக அளவிடப்பட்டு 15% முதல் 20% வரை கூடுதலாக வருவாய் கிடைக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் போது, மின்சார வாரியத்தின் மின் விற்பனை மூலமான ஆண்டு வருவாய் ரூ.65,000 கோடியாக இருக்கக்கூடும். இதில் 15% கூடுதல் வருவாய் என வைத்துக் கொண்டால் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். அதற்காக தமிழக அரசு செய்யும் முதலீடு ரூ.6,000 கோடி மட்டும் தான். அந்தத் தொகையைக் கூட மக்களிடமிருந்து பறிக்க வேண்டும் என நினைப்பது அறம் அல்ல.

இன்றைய நிலையில் ஒரு டிஜிட்டல் மீட்டரின் விலை ரூ.749 முதல் ரூ.2000 வரை மட்டும் தான். அதற்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வாடகை என்பது அநீதி. அதேபோல், ஒரு ஸ்மார்ட் மீட்டரின் இன்றைய விலை ரூ.6000 முதல் ரூ.7500 வரை. இந்தியாவுக்கு குறைந்தது 30 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் தேவைப்படும் நிலையில், அவற்றை அதிக அளவில் தயாரிக்கும் போது, ஒரு மீட்டரின் விற்பனை விலை ரூ.2000 முதல் ரூ.3000 என்ற அளவுக்கு குறையும். அவ்வாறு இருக்கும் போது அதற்காக இரு மாதங்களுக்கு ரூ.350 வாடகை வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

மின்வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ரூ.350-க்கும் குறைவான மின்கட்டணம் (250 யூனிட்டுகள்) செலுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 1.80 கோடி ஆகும். இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் செலுத்தும் ஒட்டுமொத்த மின்கட்டணத்தை விட அதிக தொகையை மின்சார மீட்டருக்கான வாடகையாக மட்டும் வசூலிக்க நினைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்?

அத்தியாவசியத் தேவைகளுக்கு பணம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையில், மின்சார மீட்டருக்கு வாடகை செலுத்த அவர்களால் முடியாது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிப்பது, மின்சாரக் கட்டணத்தை 52% அளவுக்கு உயர்த்துவது போன்ற மக்களை பாதிக்கும் முடிவுகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்