திருப்பத்தூரில் கனமழை: 9-வது முறையாக நிரம்பிய ஆண்டியப்பனூர் அணை

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 9-வது முறையாக ஆண்டியப்பனூர் அணை இன்று (வெள்ளிக்கிழமை) நிரம்பியது. அதேபோல, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 20 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாவே அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், வடபுதுப்பட்டு, மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வந்தன.

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிகளிலும், பாலாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வாணியம்பாடி, ஆம்பூரை யொட்டியுள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலத்தை கடந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், நேற்று (வியாழன்கிழமை) இரவு 9.30 மணிக்கு திருப்பத்தூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டிய கனமழையால் நகரின் தாழ்வானப்பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குடியிருப்புப்பகுதிகளில் சூழ்ந்தது.

குறிப்பாக கலைஞர் நகர், அண்ணா நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர். நகரின் பல்வேறு தெருக்கள் சேரும், சகதியுமாக காட்சியளித்தன. திருப்பத்தூர் ஒன்றியம், கந்திலி ஒன்றியத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஏலகிரி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டி வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்லும் பயணிகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அருவி அருகே செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் அணை தொடர் மழை காரணமாக 9-வது முறையாக இன்று காலை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சக்தி 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறியதாவது, ''திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் அணை 26.24 அடி உயரம் கொண்டது. இதில், 112.20 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இந்த அணை நிரம்பி இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் 14 ஏரிகளுக்கு செல்கிறது. இதன் மூலம் சுமார் 2,055 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. கால்வாய் மூலம் நேரடியாக 2,970 ஏக்கர் புஞ்சை நிலமும், 2055 ஏக்கர் நஞ்சை நிலம் என மொத்தம் 5 ஆயிரத்து 25 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது.

ஆண்டியப்பனூர் அணையில் ஏற்கெனவே 25.42 அடிக்கு தண்ணீர் இருந்தது. அதாவது, 94.77 மில்லியன் கன அடி இருந்த தண்ணீர் விவசாய பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி 40 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையாலும், ஆண்டியப்பனூர் அணையின் நீர்பிடிப்புப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் 9-வது முறையாக அணை இன்று அதிகாலை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் தண்ணீர் அளவுக்கே அணைக்கு தண்ணீர் வரத்தும் உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 49 ஏரிகள் உள்ளன. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையகால் உதயேந்திரம், பள்ளிப்பட்டு, பொம்மிக்குப்பம், சிம்மனபுதூர், மாடப்பள்ளி, பெருமாபட்டு, விண்ணமங்கலம், பசலிகுட்டை உள்ளிட்ட 20 ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அதேபோல, 6 ஏரிகள் 75 சதவீதமும், 6 ஏரிகள் 50 சதவீதமும், 17 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன. ஏரிகள் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதை தொடர்ந்து விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில், நகர்புறங்களில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்மந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

ஓடிடி களம்

15 mins ago

க்ரைம்

33 mins ago

ஜோதிடம்

31 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

48 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்