மாலுமி இல்லாத கப்பல்; தளபதி இல்லாத படை! தோல்விக்கு காரணம் கற்பிக்கும் கொங்குமண்டல திமுகவினர்

By கா.சு.வேலாயுதன்

திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர விடாமல் செய்ததோடு மட்டுமல்லாது, அதிமுகவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்ததற்கான காரணியாக கொங்கு மண்டலம் மாறியுள்ளது. மாலுமி இல்லாத கப்பல், தளபதி இல்லாத படைபோல் செயல்பட்டதே இந்த முறையும் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியை சந்தித்ததற்கு காரணம் என்கின்றனர் திமுகவினர். இதுகுறித்து அக்கட்சி சீனியர்கள் சிலரிடம் பேசியதை இங்கே தொகுத்துள்ளோம்.

கோவையிலிருந்து தர்மபுரி வரை ஒரு காலத்தில் தொழில் கேந்திரமாக இருந்த பிரதேசம். எனவே தொழிலாளர் நலனில் அக்கரை காட்டிய கம்யூனிஸ்ட்டுகள் மீதும், அத்தொழிலாளர்களுக்கான சாதக-பாதக அம்சங்களை அலசி ஆராய்ந்து ஆட்சியதிகாரத்தில் இருந்து திட்டங்கள் தீட்டியதால் திமுக ஆட்சியின் மீதும் ஒரு காலத்தில் இந்த மண்டல மக்கள் பாசமும், அக்கரையும் வைத்தே செயல்பட்டு வந்தார்கள். குறிப்பாக கோவை மாவட்டம் எப்போதுமே அதிமுகவிற்கு சிம்ம சொப்பனாமாக இருந்து வந்ததற்கு காரணம் இங்குள்ள தொழிலாள மனப்பான்மை.

எனவேதான் அவர் எப்போது தேர்தலை சந்தித்தாலும் கம்யூனிஸ்ட்டுகளில் இரண்டில் ஒன்றை கூடவே வைத்திருந்துள்ளார். தவிர தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர், தன் மூதாதைகள் மன்றாடியார் வம்சம், கொங்குமண்டலத்தை ஆண்ட கவுண்டர்களின் சமூகம் என்று கூட சொல்லி வந்தார். அதற்கு உறுதிப்படுத்தவும் செய்தனர் அப்போதைய செழியன் போன்ற கவுண்டர் சமூகத் தலைவர்கள். அது மட்டுமல்ல, ஆட்சியமைந்த போதே முக்கியமான துறை அமைச்சர்களை கொங்கு மண்டலத்தலைவர்களை பார்த்தே அமர்த்தினார்.

அதில் முக்கியமானவர்கள் எம்ஜிஆரின் பர்சனல் செக்கரட்டரி பரமசிவம் ஐஏஎஸ், அமைச்சர்கள் பொன்னையன், அரங்கநாயகம், முத்துசாமி, குழந்தைவேலு போன்றவர்கள். இந்த விஷயத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பும் அதே கொள்கையை பின்பற்றினார். பள்ளிபாளையம் தங்கமணி, செந்தில்பாலாஜி, கே.பி.ராமலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, உடுமலை சண்முக வேலு, கிணத்துக்கடவு தாமோதரன் உள்ளிட்டவர்கள் முக்கியமான துறை அமைச்சர்களாக மிளிர்ந்தது அப்படித்தான். இவர்கள் மட்டுமல்ல அதிகாரப்பதவிகளிலும் இச்சமூக மக்களையே முன் வைத்தார் அவர்.

இதனால் தன்னிகரில்லாமல் பணபலத்திலும், அரசியல் செல்வாக்கிலும் அதிமுகவை சேர்ந்த கொங்குமண்டலத்தவர்களே, அதிலும் கவுண்டர் சமூகத்தவர்களே முன்னணி வகித்தனர். அதே காலகட்டத்தில் பார்த்தால் திமுகவில் சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், ஈரோட்டில் என்.கே.கே.பெரியசாமியும் அவரது மகன் என்.கே.கே.பி.ராஜாவும், கோவையில் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் மட்டுமே அமைச்சர் ரேசில் இருந்தவர்கள். இவர்களுக்கு அதிமுக அமைச்சர்களை போல முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டதா என்றால் அதுதான் இல்லை. ‘அப்படி முக்கிய துறை ஒதுக்கப்படாததற்கும் வெற்றி தோல்விக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டுவிட்டு அதற்கு பதிலையும் சொன்னார் திமுகவின் சீனியர் ஒருவர்.

‘சமீபத்தில் ஒரு புதிய அமைச்சர் தமிழ்நாடு முழுக்க ரூ.875 கோடியில் ஒரே ஒரு ஒப்பந்தத்தை எடுத்தார். அதில் மட்டும் 15 சதவீதம் கமிஷன் வந்தது. அதை எடுத்து தான் வைத்துக் கொள்ளவில்லை. தேர்தலுக்காக கட்சியில் பாடுபடும் கீழ்மட்ட கிளை நிர்வாகியிலிருந்து, வட்ட, நகர, மாவட்ட நிர்வாகி வரைக்கும் கொடுத்து பணியை முடுக்கி விட்டார். இதுபோல அத்தனை அமைச்சர்களும் செய்யும்போது கட்சி மட்டுமல்ல, அவரின் செல்வாக்கும், சொல்வாக்கும் விரிவடைந்தது!’ என்றார்.

‘ஆனால் திமுக தரப்பில் என்ன நடக்கிறது?’ அதற்கும் அவரே இப்படி பதில் சொன்னார்:

‘கோவையில் 1996ல் எம்எல்ஏவாகி அமைச்சரானவர் பொங்கலூர் பழனிச்சாமி. அவரே ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு செயலாளர் பொறுப்பிலும் இருந்தார்.

2001ல் கோவை மாவட்டத்தில் திமுக படுதோல்வி. 2006ல் கோவை, திருப்பூர் உள்ளடங்கிய ஒரே மாவட்டத்தில் கோவை கிழக்கு, பொங்கலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி. அதனால் அப்போது பொறுப்பேற்ற திமுக மந்திரிசபையில் கோவைக்கு அமைச்சர் பதவி இல்லை. உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்ற பிறகு பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஊரக தொழில்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அது எந்த அளவுக்கு முக்கியமான துறை என்பது அப்புறம்.

2011 தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் திமுக தோல்வியடைந்தபிறகு கட்சி சீரமைப்பு என்ற பெயரால் கட்சி மாவட்டங்களை இஷ்டம்போல் பிரித்தது. அதில் முன்னாள் கவுன்சிலர், முன்னாள் பேரூராட்சி தலைவர் அளவில் பதவி வகித்தவர்களை செயலாளர்கள் ஆக்கினார்கள். பொங்கலூர் பழனிச்சாமிக்கு சேலம் மாவட்டப் பொறுப்பு, ஈரோடு என்.கே.கே.பி ராஜாவுக்கும், அவர் அப்பா பெரியசாமிக்கும் சீட் இல்லை. சேலத்தை பொறுத்தவரை வீரபாண்டி ஆறுமுகம் இருந்த வரை இருந்த நிலை வேறு. இங்கு உள்கட்சி சண்டையை சரிசெய்வதே இங்குள்ள பொறுப்பாளர்களின் வேலையாக போனது.

இப்படிப்பட்ட நிலைமையில் கோவையில் மாவட்ட செயலாளர்கள் 4 பேரில் 3 பேருக்கு சீட் இல்லை. அதனால் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள 10 வேட்பாளர்களில் 9 பேர் நிராதரவான நிலையை அடைந்தனர். மீதி உள்ள ஒருவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், பொள்ளாச்சி வேட்பாளருமான தமிழ்மணி எதிர்ப்பது முன்னாள் அமைச்சரும், தமிழக துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனை என்னும் போது போட்டி எப்படியிருக்கும்? அவர் அவரை காப்பாற்றிக் கொள்ளவே போராடி தோற்கும் போது அவர் மாவட்ட செயலாளர் பொறுப்பு வகிக்கும் மற்ற பகுதியில் நிற்கும் வேட்பாளர்களை எப்படி காப்பாற்ற முடியும்.

அதுதான் இவ்வளவு பெரிய தோல்விக்கும் காரணமாக உள்ளது. தளபதி இல்லாத படை போல, மாலுமி இல்லாத கப்பல் போல தடுமாறித்தடுமாறியே திமுக தோற்றிருக்கிறது. இந்த நிலையை திமுக எதிர்காலத்தில் மாற்ற வேண்டுமானால் மீண்டும் கட்சி மாவட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். அனுபவ மிக்க மாலுமிகளை வைத்தே, புதிய மாலுமிகளை உருவாக்க வேண்டும்!’ என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

மேலும்