இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணக்கு வருகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக-வுக்குள் நடைபெறும் உட்கட்சி மோதல் காரணமாக, இரட்டை இலைசின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று (ஜூலை 7) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனருமான அரும்பாக்கம் பி.ஏ.ஜோசப் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றுவதற்காக, முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ.5 ஆயிரம் கோடியை செலவிட்டுள்ளதாக, ஒரு வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில், தனது பலத்தை நிரூபிக்க மேலும் ரூ.1,000 கோடியை செலவு செய்யஅவர் திட்டமிட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை பழனிசாமி தரப்பு இதுவரை மறுக்கவில்லை.

அதிமுக பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற பழனிசாமி அதிக தொகையை செலவிட்டு வருவது, ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமின்றி, தேர்தல் விதிமுறைகளுக்கும் முரணானது.

பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு சாதகமாக செயல்பட, அவர்களை விலை கொடுத்து வாங்கவில்லை என பழனிசாமி இதுவரை தெரிவிக்கவில்லை.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோருக்கு இடையிலான பிரச்சினை, சாதிப் பிரச்சினையாக உருவெடுத்து, தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், வரும் ஜூலை 11-ம் தேதிநடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு, இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக டிஜிபியும் தடை விதிக்காவிட்டால், அது பொது அமைதிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் அதிமுகவில் எதிரெதிர் துருவங்களாகி விட்டனர். இதனால் கட்சி நிர்வாகிகளுக்குள், உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. எனவே, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அந்தக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜூன் 28-ம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை.

இதுகுறித்து கேள்வி எழுப்ப, எனக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, மறுப்புத் தெரிவிக்க முடியாது. ஏனெனில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்குள் நடக்கும் பிரச்சினை குறித்து, நான் மட்டுமல்ல, வாக்காளர் என்ற முறையில் யார்வேண்டுமென்றாலும் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் முறையிட முடியும்.

எனவே, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

52 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்