‘பதவியை காப்பாற்றிக் கொள்ள திமுக மீது பழிபோட முயற்சி’ - இபிஎஸ் கருத்துக்கு டிஆர் பாலு பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரைச் சந்தித்து ஆதரவு கோரினார். திரவுபதி முர்முவுக்கு அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் அதில் பேசியவர், "பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. திரவுபதி முர்முவை ஆதரிக்காமல், சமூக நீதி என பேசி மக்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். திமுக காங்கிரஸ், சூழ்ச்சியால் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்கமா வெற்றி பெற முடியவில்லை" என்று அவர் கூறினார். எடப்பாடியின் இந்தக் கருத்துக்கு திமுக தரப்பில் டிஆர் பாலு பதில் கொடுத்துள்ளார். அதில், "குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனக்கே தெரியாத “சமூகநீதி” பற்றி தி.மு.க.விற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி பேசுவதில் பழனிசாமி க்கு நிகர் அவரேதான் என்பது எனக்குத் தெரியும்.

திராவிட முன்னேற்றக் கழகமும், கலைஞரும்தான் பட்டியலினச் சமூகத்திலிருந்து அறிவுசார்ந்த மாபெரும் தலைவரான கே.ஆர்.நாராயணனை இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக ஆக்கியது. இந்திய நாடாளுமன்றத்தின் பேரவைத் தலைவராக மிகச் சிறந்த நிர்வாகியான பாபு ஜெகஜீவன்ராம் மகள் மீராகுமார் தேர்வு செய்யப்படுவதற்குத் திமுகழகம்தான் உறுதுணையாக இருந்தது. பட்டியலின - பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியது மட்டுமல்ல உள்இடஒதுக்கீடு அளித்து உண்மையான சமூகநீதியை அளித்தது தி.மு.க. அரசும் கலைஞரும்தான் என்ற பால பாடம் எல்லாம் பாவம் பழனிசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதைத் தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் அவர் இல்லை.

தன் கட்சியின் பொதுக்குழுவில், ஜெயலலிதா அமர்ந்த பொதுச் செயலாளர் பதவியில், தான் எப்படிக் குறுக்குச் சால் ஓட்டி அமருவது, அதற்குக் கோடி கோடியாகக் கரன்சி நோட்டுகளை எப்படி அள்ளி விடுவது, ஒவ்வொரு நாளும் பொதுக்குழு உறுப்பினர்களை எப்படி விலைக்கு வாங்குவது என்ற ஆலோசனையில் அவர் மூழ்கியிருப்பது ஒருபுறமிருக்க, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரில் யார் பதவியில் இருக்கிறார்கள், யாரின் கீழ் கட்சி இருக்கிறது என்பது எல்லாம் தெரியாமல் தவிக்கிறார். அ.தி.மு.க திக்குத் தெரியாத காட்டில் - திசை தெரியாத ரூட்டில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பா.ஜ.க. நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க புலி வேடம் போட்டுத் தி.மு.க மீது பாய்கிறார்.

அ.தி.மு.க.விற்கு என்று ஒரு தலைமைக் கழகம் இருந்தும் அங்கே குடியரசுத் தலைவர் வேட்பாளரை அழைத்து தங்கள் ஆதரவைக் கொடுக்க முடியாமல் பிளவுபட்டு ஆளுக்கொரு பக்கம் நின்று “தண்ணீர் பாட்டில்” வீசிக் கொண்டிருக்கும் பழனிசாமி போன்றவர்களுக்கு நாவடக்கம் முதலில் தேவை. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்றாலும், குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு என்றாலும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தைத் தேர்வு செய்யாமல் நட்சத்திர ஹோட்டலில் அரசியல் நடத்தும் பழனிசாமி போன்றோர் தி.மு.க.வின் சமூகநீதி வரலாற்றைச் சற்று படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆதரவைக் கூட தங்களுக்குள் “முன்னாள் ஒருங்கிணைப்பாளர்” “முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர்” எனப் போட்டி போட்டுக் கொண்டு உண்மையான அ.தி.மு.க.விற்கு யார் தலைவர் என்ற நிலை தெரியாமல் அளித்திருக்கும் இந்த ஆதரவுக்கு வேறு காரணம் தேட முடியாது என்பதால் தி.மு.க.வை வீண் வம்புக்கு இழுத்து தன் கட்சிக்குள் நடக்கும் “ஸ்ரீவாரி மண்டப” கூத்துக்களை மறைக்க பழனிசாமி முயற்சி செய்கிறார். அது நடக்காது.

இன்னும் சில நாட்களில் இந்த கூத்துமிக மோசமான குழாயடிச் சண்டையாக மாறப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. தனது நாற்காலியே ஆடிக்கொண்டிருக்கும் போது, இத்தகைய வேலையை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

திமுகவை பொறுத்தவரை ஜனநாயக ரீதியாக எதிர்கட்சிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி ஜனநாயகத்தை, கூட்டாட்சித் தத்துவத்தை, மதச்சார்பி்ன்மையை, மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு குடியரசுத் தலைவர் வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கிறது. அதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க உட்கட்சிச் சண்டையில் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க. அடிவருடி என்ற பட்டத்தைத் தான் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று பழனிசாமி ஆசைப்படுகிறார். அதை அவர் தாராளமாகச் செய்யட்டும். ஆனால் திமுகவையும் சமூகநீதியையும் கொச்சைப்படுத்தும் செயலில் அவர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 mins ago

விளையாட்டு

41 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

மேலும்