''தீர்மானங்களுக்கு முக்கியத்துவமில்லை'' - மதுரை மேயருக்கு எதிராக திமுக மண்டலத் தலைவர்கள் போர்க்கொடி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மண்டலக் கூட்டங்களில் வார்டுகளுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளுக்காக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மாநகராட்சியும், மேயரும் நிறைவேற்றுவதில்லை என்று மதுரை மேயருக்கு எதிராக திமுக மண்டலத் தலைவர்களே போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''மூன்று முறை எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். நான்காவது முறையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளேன். அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஆனால், கடந்த ஒரு ஆண்டாக மாநகராட்சி குடிநீர் குழாய் பதிக்கும் பணி, பாதாள சாக்கடைப் பணிகள் நடப்பதைப் பார்க்கிறேன். மற்றப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஆக்கப்பூர்வமாக திட்டமிட்டு பாதாள சாக்கடைப்பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்'' என்றார்.

மண்டலத் தலைவர் வாசுகி: “பாதாளக் சாக்கடைப்பணி, புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மந்தமாக நடக்கிறது. அதனால், எங்கள் மண்டல வார்டுகளில் உள்ள சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளன. இந்தப் பணியை சப்-கான்டிராக்டர் மேற்கொள்வதால் அவர்கள் மதிப்பதே இல்லை. மழைக்காலம் விரைவில் வர இருக்கிறது. சாலைகள் நிலை இன்னும் மோசமடையும். இதுவரை மூன்று மண்டல கூட்டங்களை நடத்தி தீர்மானம் போட்டு 39 பணிகளை செய்ய பரிந்துரை செய்தோம். ஒரு வேலைகூட நடக்கவில்லை. அதனால், கவுன்சிலர்கள் எதற்கு மண்டல கூட்டம் நடத்துகிறீர்கள், இனி வர மாட்டோம் என்று எங்களிடம் கோபப்படுகிறார்கள்.”

மண்டலத் தலைவர் சரவணபுவனேஷ்வரி: “கவுன்சிலராகி 5 ஆயிரம், 6 ஆயிரம் ரூபாய் சாதாரண ப்ளம்பர் பணிகளை மட்டுமே வார்டுகளில் செய்ய முடியகிறது. ஒரு இடத்தில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்குவதற்கு கவுன்சிலர்களுக்கு தனி அலுவலகம் கூட இல்லை.”

அப்போது, மற்ற மண்டலத் தலைவர்களும் எழுந்து, ''பணிகளை செய்ய எப்போது தீர்மானம்போட்டு கொடுத்தாலும் நிதியில்லை நிதியில்லை என்று நிராகரிக்கிறீர்கள். மக்களிடம் எப்படி செல்வது, அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால்தான் கவுன்சிலர்கள் பெயர் கிடைக்கும். அதன்மூலம் திமுக ஆட்சிக்கு ஆதரவு பெருகும்,'' என்றனர். கவுன்சிலர்கள் மேசையில் தட்டி ஆரவாரம் செய்தனர்.

திமுக கவுன்சிலர் ஜெயராம்: “கரிமேடு போலீஸ் ஸ்டேஷன் தற்போது மாநகராட்சி திருமண மண்டபத்தில் வாடகைக்கு உள்ளது. ஆனால், அவர்கள் 2015ம் ஆண்டு முதல் வாடகை கட்டவில்லை. இதுவரை 44 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்த மண்டபம், 1980ம் ஆண்டு எம்ஜிஆர் கட்டியது. என்னுடைய திருமணமே இந்த மாநகராட்சி மண்டபதில்தான் நடந்தது. எங்கள் பகுதியில் அடித்தட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

நமக்கு நாமே திட்டத்தில் நான் என்னுடைய சொந்த பணம் ரூ.10 லட்சம் தருகிறேன். போலீஸ் ஸ்டேஷனை அங்கிருந்து மாற்றி அந்த மண்டபத்தை புதுப்பித்தால் அடித்தட்டு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுபோல், என்னுடைய வார்டில் மற்றொரு மாநகராட்சி மண்டபத்தில் அம்மா உணவகம் செயல்படுகிறது. முன்போல் இங்கு யாரும் சாப்பிட வருவதில்லை. இந்த உணவகத்தையும் திருமணம் மண்டபமாக மாற்றலாம். மாநகராட்சியில் நிதியில்லை என்று கூறுகிறீர்கள்.

ஆனால், ஓடாத குடிநீர் மோட்டார்களுக்கு மின்வாரியத்திற்கு மாநகராட்சி மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துகிறார்கள். மாநகராட்சியில் 1960 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள் என்று கணக்கு சொல்கிறீர்கள். ஆனால், 750 பேர்தான் பணிக்கு வருகிறார்கள். மீதி பேரின் ஊதியம் எங்கு செல்கிறது. அதுபோல், ஒரு பணியாளருக்கு 21 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 8 ஆயிரம் ரூபாய்தான் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணமெல்லாம் யாருக்கு செல்கிறது.

அதுபோல், இன்னமும் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றால் வெறும் ரூ.800 மட்டும் கொடுக்கிறீர்கள். ஆனால், வார்டில் உள்ள சாக்கடைகளை உற்றுப்பார்த்து மாதம் 4 ஆயிரம் ரூபாய் மருத்துவ செலவு செய்கிறோம்.”

அதிமுக 3வது முறையாக வெளிநடப்பு

இதுவரை 4 மாநகராட்சி கூட்டங்கள் நடந்துள்ளது. இதில், முதல் கூட்டம் தவிர மற்ற அனைத்துக் கூட்டங்களிலும் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக கவுன்சிலர்கள் 11 பேரும் வழக்கம்போலே வெளிநடப்பு செய்தனர். அவர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிராக மாநகராட்சி மைய கூட்டரங்கிற்கு சென்று சிறிது நேரம் கோஷம்போட்டுவிட்டு வெளிநடப்பு செய்தனர். மாநகராட்சியில் மொத்தம் அதிமுகவுக்கு 15 கவுன்சிரல்கள் உள்ளனர். ஆனால், அதிமுக பொதுக்குழு நடந்ததால் சென்னைக்கு மற்ற கவுன்சிலர்கள் சென்றதால் அவர்களால் கூட்டத்திற்கு வர முடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்