‘மகுடம் மறுத்த மன்னன்’ வழக்கறிஞர் வி.பி.ராமன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு: உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டனர்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மறைந்த வி.பி.ராமனின் வாழ்க்கை வரலாற்று நூல் ‘மகுடம் மறுத்த மன்னன்’ நேற்று வெளியிடப்பட்டது.

தமிழக முன்னாள் தலைமை வழக்கறிஞர் மறைந்த வி.பி.ராமனின் வாழ்க்கை வரலாறு குறித்து,‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில், அவரது இளைய மகன் பி.எஸ்.ராமன் எழுதிய நூல், தமிழ், ஆங்கிலத்தில் நேற்றுவெளியிடப்பட்டது. சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றநூல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று தமிழ்நூலை வெளியிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆங்கில நூலை வெளியிட, இரண்டையும் வி.பி.ராமனின் மனைவி கல்பகம் ராமன் பெற்றுக் கொண்டார்.

அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘வி.பி.ராமன் எங்கிருந்தாலும் சுயமரியாதைக்காரராக, அண்ணா மீது அகலாத மதிப்பு கொண்டவராக இருந்தார்’’ என்றார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் உரையை துரைமுருகன் வாசித்தார். அதில் கூறியிருந்ததாவது:

வி.பி.ராமன் குடும்பம் வாழும் இடத்துக்கு ‘லாயிட்ஸ் கார்னர்’ என்று பெயர். லாயிட்ஸ் சாலையின் இன்னொரு கார்னரில் வாழும்குடும்பம்தான் எங்கள் கோபாலபுரம் குடும்பம். ஒரே சாலை சாலையின் இரு முனைகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அரசியல்ரீதியாக பிணக்குகள் ஏற்பட்டாலும் நம்மை யாரும் பிரிக்க முடியாது என்பதற்கு அடையாளமாகவே,வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டுக்கு நான் அழைக்கப்பட்டுள்ளேன். எத்தனை புயல்கள், பூகம்பங்கள், சுனாமிகள் அடித்தாலும் இரு குடும்பங்கள் இடையே உள்ள நட்பு பிரிக்க முடியாதது. இரு குடும்பங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. திமுக சட்டதிட்டங்களை வகுத்த குழுவில்இடம்பெற்றவர் வி.பி.ராமன். நான்இன்று வாழ்ந்து வரும் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில்தான்வி.பி.ராமன் திருமணம் நடைபெற்றுள்ளது. மகுடம் மறுத்த மன்னனாக வி.பி.ராமன் இருந்தாலும், தான் வாழ்ந்த காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்தவர். நீதிமன்றத்தில் கோலோச்சியவர். இந்த புத்தகம் பல்வேறு வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும். திமுகவின் தொடக்க காலத்தில் துணையாக நின்றவர் வி.பி.ராமன். இது புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

திராவிட நாடு கொள்கையில் மாறுபாடு காரணமாக திமுகவில் இருந்து 1961-ல் விடுவித்துக் கொண்டார். இருந்தாலும் 1967-ல் அண்ணாவுக்கும், ராஜாஜிக்குமான சந்திப்பை ஏற்பாடு செய்து கூட்டணிக்கு உதவினார். அரசியல்ரீதியாக மாறான நடவடிக்கை எடுத்தாலும் கருணாநிதியுடன் நட்பு கொண்டிருந்தார். இந்த புத்தகம் மிக அரிய பொக்கிஷம். வரலாற்றை தீர்மானித்த தனிமனிதர் வி.பி.ராமன்.

இவ்வாறு முதல்வர் உரையில் கூறப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசியதாவது. ‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பது ஆச்சரியமல்ல. ராமன் என்றாலே அவர் மகுடம் மறுத்த மன்னனாகத்தான் இருப்பார், அல்லது மகுடம் மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். தனது தந்தை பற்றிய புத்தகம் வெளியிட, அதை தாயார் மேடையில் அமர்ந்துபார்க்கும் வாய்ப்பு மிக அரிதானது.

ஒரு மனிதன் செய்த சாதனையை, அவரது வாழ்க்கைவரலாற்றைப் படித்து தெரிந்து கொள்வதைவிட, எத்தனை பேரின்வாழ்க்கை வரலாற்றில் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை வைத்துத்தான் எடை போடவேண்டும். தமிழகத்தின் வரலாறுமற்றும் மிகப்பெரிய மனிதர்களின் வரலாறு எழுதப்படும்போது வி.பி.ராமனும் கட்டாயம் அதில் இடம்பெற்றிருப்பார். வி.பி.ராமன் வழக்கறிஞராக மட்டுமின்றி பன்முகத்தன்மையுடன் இருந்தார்.

26 வயதில் திமுகவின் சட்டதிட்ட குழுவில் இருந்தார். அரசியல்,சினிமா, இசை, எழுத்து, கற்பித்தல், நடிப்பு என அனைத்து துறைகளிலும் திறமை கொண்டிருந்தார். கண்ணதாசனுடன் ராமனுக்கு இருந்த நட்பு சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

வி.பி.ராமனின் வாழ்க்கையில் 40 ஆண்டு காலம் தொண்டு செய்தபாகீரதியம்மாள் என்ற பாட்டி பற்றி புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்த நூலில், பி.எஸ்.ராமன், தனது தந்தையின் பொன்மொழிகளை ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில், முன்னாள் கிராண்ட் மாஸ்டர் கேஆர்என் மேனன், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் என்.சீனிவாசன் ஆகியோர் வி.பி.ராமன் உடனான அனுபவம் குறித்து பேசினர். நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தயாநிதி மாறன்எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

41 mins ago

க்ரைம்

48 mins ago

சினிமா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்