அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் வடம் பிடிக்க எதிர்ப்பு - எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உட்பட 63 பேர் கைது

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோயிலில் உள்ள வேளிமலை முருகன் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரகோயிலில் வேளிமலை முருகன் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முருகன்- வள்ளி அம்பாள் ஒரு தேரிலும், விநாயகர் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த பாஜக மற்றும் இந்து அமைப்பினர், மனோ தங்கராஜ், மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதேநேரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு ஆதரவாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுகவினர் தேரை இழுத்தவாறு ‘வெற்றிவேல் முருகனுக்கு... அரோகரா...’ என போட்டி கோஷம் எழுப்பினர். இதனால் தள்ளுமுள்ளு நிலவியது.

குமரி எஸ்பி ஹரிகிரண் பிரசாத், தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கூட்டத்தை கலைத்தனர். எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, அர்ஜூன் சம்பத் உட்பட 63 பேரை கைது செய்தனர்.

குமரியிலும் எதிர்ப்பு

குமாரகோயில் தேரோட்டத்துக்கு முன்னதாக காலை 7 மணியளவில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியையும் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் தொடக்கி வைத்தனர். அப்போதும் பாஜக, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜக, இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று மாலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 இடங்களில் மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

48 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்