சூரிய சக்தி மின்சாரத்துக்காக அதானி குழுமத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்: இளங்கோவன்

By செய்திப்பிரிவு

தேர்தலுக்குப் பிறகு புதிய ஆட்சி அமையும் போது சூரிய சக்தி மின்சாரத்துக்காக அதானி குழுமத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் '2013-க்குள் 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்’ என்று ஜெயலலிதா வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால், தற்போது வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. திமுக ஆட்சியில் முதலீடு செய்யப்பட்டு, தொடங்கப்பட்ட மின் திட்டங்களின் மூலமாகத்தான் தற்போது மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 15 ஆயிரத்து 400 மெகாவாட் ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால் தற்போது 13 ஆயிரம் மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதால் விவசாயம், தொழில், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழக தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழகத்தில் மின்வெட்டே இல்லையென முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் ஜெயலலிதாவும், அவரது அமைச்சர்களும் துணிந்து பொய் பேசி வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு 4 ஆயிரம் மெகாவாட் திறன்கொண்ட மெகா மின் திட்டம் ரூ.24 ஆயிரத்து 200 கோடி முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் தொடங்க 2012-ல் அனுமதி வழங்கப்பட்டது.

இதுவரை அந்த மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. உடன்குடி மின் திட்டத்திலும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தலையீட்டின் காரணமாக முடக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3.50 விலைக்கும், அனல் மின்சாரம் ரூ.4 விலைக்கும் கிடைக்கிற போது, அதானி நிறுவனத்திடமிருந்து ரூ.7.10 விலைக்கு வாங்கப்படுகிறது.

2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையப் போகிற புதிய ஆட்சியில், அதானி குழுமத்துடனான மின் கொள்முதல் ஒப்பந்தம் நிச்சயமாக ரத்து செய்யப்படும். 2011 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை செயல்படுத்தாமல் உள்ள ஜெயலலிதாவுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்'' என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

விளையாட்டு

4 mins ago

க்ரைம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்