ஊழலற்ற ஆட்சியை நாங்கள் மட்டுமே தரமுடியும்: புதுச்சேரியில் அமித்ஷா பேச்சு

By செய்திப்பிரிவு

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஊழலற்ற, நல்லாட்சியை காங்கிரஸ், திமுக, அதிமுக, என்ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் தர முடியாது. அதை எங்களால் மட்டுமே தரமுடியும் என்று பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் பாஜக கட்சி தனித்து போட்டியிடுகிறது. 30 தொகுதியிலும் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா நேற்று தனி விமானத்தில் புதுச்சேரி வந்தார்.

லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:

வருகிற 16ந்தேதி நீங்கள் அளிக்கும் வாக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்வார்கள் என்பதை நிர்ணயிக்கும். சிறிய மாநிலமான புதுச்சேரியில் நல்ல ஆட்சி நடந்தால் சொர்க்கபூமியாக மாறும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கான சூழ்நிலையும் புதுவையில் நிலவுகிறது. ஆனால் இதுவரை ஆண்ட கட்சிகள் புதுவையின் வளர்ச்சிக்கோ, இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காகவோ எதையும் செய்யவில்லை.

காங்கிரஸ் திமுக கூட்டணி ஓரணியாகவும், என்ஆர்.காங்கிரஸ், அதிமுக தனியாகவும் போட்டியிடுகிறது. பாஜகவும் தனித்து போட்டியிடுகிறது.

மத்தியில் காங்கிரஸ், திமுக ஆட்சி கடந்த 10 ஆண்டு நீடித்தது. இதில் சுமார் 11 லட்சம் கோடி அளவில் ஊழல்கள் நடந்தன. 10 ஆண்டுகால ஆட்சியில் பஞ்சபூதங்கள் அனைத்திலும் ஊழல் செய்துள்ளனர். ஊழல் நடைபெறாத துறைகளே இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் ஊழலுக்காக சிறை சென்று வந்தவர். புதுவையில் ஆளும் என்ஆர்.காங்கிரஸ் அரசின் மிக மோசமான நடவடிக்கைகளால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

கடந்த 2 ஆண்டாக மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் விரோதிகள்கூட எங்களை எதிர்த்து ஒரு ஊழல் குற்றச்சாட்டை சொல்ல முடியாது. ஊழலற்ற, நல்லாட்சியை காங்கிரஸ், திமுக, அதிமுக, என்ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் தர முடியாது. பாஜகவால் மட்டுமே நல்லாட்சியை தர முடியும்.

மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழைகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஆயுள்காப்பீடு, விபத்து காப்பீடு என அடுக்கடுக்காக பல திட்டங்கள் பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையை ஆளும் என்ஆர்.காங்கிரஸ் அரசு இத்திட்டங்களை செயல்படுத்த முன்வரவில்லை. புதுவையிலும் இத்தகைய திட்டங்கள் வர பாஜக ஆட்சி அமைய வேண்டும்.

புதுவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 2 லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்களுக்கும் பாஜக ஆட்சி அமைந்தால் வேலை வழங்கப்படும். மூடப்பட்டுள்ள சிறிய, பெரிய தொழிற்சாலைகளை மீண்டும் திறப்போம்.

கடந்த 10 ஆண்டுகளில் 550 மீனர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாஜக ஆட்சிக்கு பின் இதுவரை ஒரு மீனவர்கூட சுடப்படவில்லை. தூக்கில் போட இருந்த 5 மீனவர்களை பாஜக அரசு காப்பாற்றியுள்ளது என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், முன்னாள் மாநில தலைவர்கள் விஸ்வேஸ்வரன், கேசவலு, தாமோதரன் மற்றும் பாஜக வேட்பாளர்கள் உடனிருந்தனர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

21 mins ago

க்ரைம்

27 mins ago

க்ரைம்

36 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்