ஆண்டுதோறும் 30,000 பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில்லை: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். அவர்களில் 30 ஆயிரம் பேருக்குக் கூட வேலை கிடைப்பதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை கல்வி ஆகும். ஆனால், திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியில் திட்டமிட்டு சீரழிக்கப்பட்ட துறைகளின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது கல்வித் துறை தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடை இச்சீரழிவு தான்.

பயிர்கள் சிறப்பாக வளர்ந்து அமோக விளைச்சல் தர வேண்டும் என்றால் நாற்றாங்கால் வலுவாக இருக்க வேண்டும். கல்வியின் நாற்றாங்கால்கள் பள்ளிக்கூடங்கள் தான். காமராஜர் ஆட்சிக்காலம் வரை தமிழகத்தில் நல்ல சிந்தனையாளர்களும், அறிவியலாளர்களும் உருவெடுக்கக் காரணம் பள்ளிக் கல்வி வலிமையாக இருந்தது தான்.

ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அரசு பள்ளிக்கூடம் சீரழிக்கப்பட்டு, மனப்பாடத்தை ஊக்குவிக்கும் தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டன. அதனால் மாணவர்கள் சிந்திக்கும் திறனை இழந்து மனப்பாட எந்திரங்களாக மாறினர். அதன் விளைவாகவே ஐஐடி தொடங்கி அனைத்து தேசிய நுழைவுத் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் பின்தங்கினார்கள்.

ஐஐடிக்களில் உள்ள 10,000 இடங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்ற மீதமுள்ளவற்றில் பெரும்பாலானவற்றை ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் பாடத்திட்ட மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். மொத்த இடங்களில் தமிழக பாடத்திட்டத்தை படித்தவர்களுக்கு கிடைத்தது வெறும் 9 இடங்கள் மட்டுமே. தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், லட்சத்தில் ஒருவருக்கு தான் ஐஐடி வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள நூற்றுக்கணக்கான இடங்களில் ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐஐடி) மொத்தமுள்ள 210 இடங்களில் ஒரே ஒரு இடம் தான் தமிழக பாடத்திட்ட மாணவருக்கு கிடைத்திருக்கிறது. இவ்வாறாக தமிழகப் பாடத்திட்ட மாணவர்களை பயனற்றவர்களாக மாற்றிய பாவம் 50 ஆண்டு கால திமுக, அதிமுக ஆட்சிகளையே சேரும் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். அவர்களில் 30,000 பேருக்குக் கூட வேலை கிடைப்பதில்லை. மருத்துவப் படிப்புக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மருத்துவம் கற்க நினைத்த தமிழக மாணவர்களின் கனவு சிதைந்திருக்கிறது. இதற்குக் காரணம் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து மாணவர்களுக்கும் உலகத்தர சமச்சீர் கல்வி வழங்க தமிழக அரசு தவறியது தான்.

தமிழகத்தில் தரமான சமச்சீர்கல்வி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்திய போது, என்னை சமரசப்படுத்துவதற்காக தரமற்ற, பெயரளவிலான சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் கருணாநிதி. அந்த கல்விக்கும் முட்டுக்கட்டை போட்டவர் ஜெயலலிதா. இவையெல்லாம் அறியாமல் நிகழ்ந்த தவறு அல்ல. கல்வித்துறையை சீரழிக்க திராவிடக் கட்சிகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதிச் செயல்கள்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

34 mins ago

சுற்றுச்சூழல்

36 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

58 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்