10-ம் வகுப்பு வட மாவட்ட தேர்ச்சி விகிதம்: அன்புமணி கவலை

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்பில் வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

மேலும், மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களில் ஜனனி என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் அரசு பள்ளி மாணவி என்பதும், முருகப்பிரியா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் மாநகராட்சிப் பள்ளி மாணவி என்பதும் கவலையளிக்கும் விஷயம் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட அதிகமாக 93.60% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராசிபுரம் எஸ்.ஆர்.வி. எக்செல் பள்ளி மாணவி பிரேமசுதாவும், விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளி மாணவர் சிவக்குமாரும் 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

மாநில அளவில் 50 மாணவ, மாணவியர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 224 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இவர்கள் மேலும் பல சாதனைகளை படைக்கவும், உயர்கல்வி கற்கவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களில் ஜனனி என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் அரசு பள்ளி மாணவி என்பதும், முருகப்பிரியா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் மாநகராட்சிப் பள்ளி மாணவி என்பதும் கவலையளிக்கும் விஷயமாகும்.

அதேபோல், முதல் மூன்று இடங்களைப் பிடித்த 276 பேரில் 3 பேர் மட்டும் தான் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆவர். தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வி மோகம் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது; தமிழ் வழிக் கல்வி படிப்பவர்களுக்கு எவ்வளவு மோசமான கல்வி வழங்கப்படுகிறது என்பதற்கு இது வேதனை அளிக்கும் உதாரணமாகும்.

அதேபோல், தேர்ச்சி விகிதங்களைப் பொருத்தவரை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்த ஈரோடு மாவட்டம் தான் இப்போதும் 98.48% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் 98.17% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 97.81% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அதேநேரத்தில் வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது. குறிப்பாக +2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கடைசி இடம் பிடித்த வேலூர் மாவட்டம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியிலும் கடைசி இடம் பிடித்திருக்கிறது. கடைசி 10 இடங்களை பிடித்த மாவட்டங்களில் அரியலூர், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய 6 மாவட்டங்கள் வட தமிழகத்தைச் சேர்ந்தவை. அதேபோல், நாகை, திருவாரூர் ஆகிய காவிரிப் பாசன மாவட்டங்களின் நிலையும் கவலை அளிக்கிறது.

வட மாவட்டங்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியில் பின்தங்கி இருக்கும் இருக்கும் நிலையில் அதை சரி செய்ய திமுக, அதிமுக அரசுகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. இந்த மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு மாணவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. மாறாக வட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பள்ளிகளில் 40 % ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அரசின் சார்பில் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளுக்கான கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதும் தான் இம்மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவதற்கு காரணமாகும்.

வட மாவட்டங்கள் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் விரைவில் நடைபெறவிருக்கும் சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று மேல்நிலை கல்வியைத் தொடரவும் வாழ்த்துக்கள்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

8 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்