ரயில்வே தேர்வு | தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க சீமான் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ரயில்வே துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில்வே துறை தேர்வினை எழுதத் தமிழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் ரயில்வே துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, மத்திய அரசின் பணிகளுக்கு தமிழக இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, ரயில்வே துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வரும் மே 9 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்காக, தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி, தேர்வு நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லில் விண்ணப்பித்த தேர்வருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியிலும், ஈரோட்டில் விண்ணப்பித்த தேர்வருக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர், மற்றும் பலருக்கு வட மாநிலங்களிலும் எனப் பணியாளர் தேர்வு வாரியம் வேண்டுமென்றே 1000 கி.மீ.க்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளது. தேர்வு மையம் அமைந்துள்ள குறிப்பிட்ட இடம் குறித்து நான்கு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்ற நிலையில், வேறு மாநிலத்தின் இரண்டாம் நிலை நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்துள்ள தேர்வு மையத்தினை தமிழகத் தேர்வர்கள் கண்டறிவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல் உள்ளது.

மேலும், தற்போது கரோனா மூன்றாவது அலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வட மாநிலங்களுக்குப் பயணிப்பதும், அனுமதி பெறுவதும், தொற்றில்லா சான்றிதழ் பெற்றுத் தேர்வு எழுதுவதும் மிகக் கடினமானது. எனவே, இது தமிழகத் தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, உளவியலாக அவர்களைச் சிதைத்துத் தோல்வியுறச் செய்வதற்கும், தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென, தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் தொடுக்கப்படும் இனவாதத் தாக்குதலேயாகும்.

மத்திய அரசிற்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கின்ற தமிழகத்தில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்காதது ஏன்? என்பது குறித்தும், முறைகேடாகத் தேர்வு நடைபெறும் வட மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்போது, அப்படியான எந்தப் புகாரும் எழாத நிலையில் தமிழகத்தில் தேர்வு மையங்களை அமைக்கத் தேர்வு வாரியம் தவறியது ஏன்? என்பது குறித்தும் மத்திய அரசும், ரயில்வே துறை பணியாளர் தேர்வு வாரியமும் விளக்கமளிக்கவேண்டும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, ரயில்வே துறையின் முதல்நிலை தேர்விலும் இதேபோன்று வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து அறிவிப்பு வெளியானபோது, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் உடனடியாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அது குறித்து உடனடியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது வாய்மூடி அமைதி காப்பது ஏன்? என்பது குறித்தும், தமிழகத்தில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பில் என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பது குறித்தும் தமிழக அரசு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.

ஆகவே, ரயில்வே துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்துதர ரயில்வேதுறை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் வழிவகைச் செய்ய மத்திய அரசும் தமிழக அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதுவரை ரயில்வே துறைத் தேர்வினைத் தள்ளிவைக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

27 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்