வாக்களிப்பதில் சிரமமா?

By செய்திப்பிரிவு

வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் நேரத்தில் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் பற்றி வாக்காளர்கள் பலர் தங்கள் அனுபவங்களை ‘தி இந்து’ நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர். அவற்றில் சில பிரச்சினைகள் பற்றி தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை பெற்றுள்ளோம். பிரச்சினைகளும் அதற்கான விளக்கங்களும் வருமாறு:

டி.செல்வம் - சேலம் வடக்கு

உடல் நலமில்லாமல் இருப்பவர்கள், வாக்குச்சாவடிக்கு தனியாக சென்று வாக்களிக்க முடிவதில்லை. அவர்களுடன் யாராவது உடன் வந்து வாக்களிக்க அனுமதி உண்டா?

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், வாக்களிக்க முடியாதவர்களுடன் 18-வயது நிறைவடைந்த ஒருவர் வரலாம். வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் உறுதிமொழி அளித்த பின், வாக்களிக்க உதவலாம்.

ஹெச்.முகமது ரிஸ்வான் - மடத்துக்குளம்

சில வாக்குச்சாவடிகளில் ஒரே அறையில் இரண்டு வாக்கு இயந்திரங்களை வைப்பதால், எந்த இயந்திரத்தில் இருந்து ‘பீப்’ சப்தம் வந்தது என்பதில் குழப்பம் வருகிறது. இதற்கு ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

எந்த வாக்குச்சாவடிகளிலும் ஒரே அறையில் இரண்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு வாக்குச்சாவடியில் ஒரு இயந்திரம் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். எனவே, வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படாது.

கே.ஆறுமுகசாமி - ஓசூர்

எனது காலில் அடிபட்டுள்ளதால் வாக்கர் வைத்து நடக்கிறேன். வாக்குச்சாவடி தூரமாக இருப்பதால், வாகனத்தில் வாக்குச்சாவடி வரை வர முடியுமா? வாக்கர் வைத்து நடக்க முன் அனுமதி பெற வேண்டுமா?

வாக்குச்சாவடி வரையில் தங்கள் சொந்த வாகனத்தில் வரலாம். அதன்பின் தேவைப்பட்டால், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகளை பயன்படுத்தலாம். இதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரிமுல்லா - அரக்கோணம்

நாம் வாக்களிக்கச் செல்லும்போது, நமக்கு முன்னே நமது வாக்கினை வேறொருவர் செலுத்தியிருந்தால், மீண்டும் நாம் நமது வாக்கினைச் செலுத்த அனுமதி கிடைக்குமா?

இதற்காக டெண்டர் வாக்கு என்ற வசதி உள்ளது. வாக்காளரின் ஆவணங்களை சரிபார்த்து, புகைப்படத்தையும் ஒப்பிட்டு, முகவர்களின் ஒப்புதலுடன் வாக்குச்சீட்டில் வாக்கை பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த வாக்குச்சீட்டு ஒரு உறையில் போடப்பட்டு சீலிடப்பட்டு வைக்கப்படும். இது எண்ணிக்கையின்போது பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, வேட்பாளர்கள் இடையில் சமநிலை ஏற்படும்போது, பிரிக்கப்படும்.

எஸ்.சவுண்டப்பன் - ஓமலூர்.

நான் ஒரு மாற்றுத்திறனாளி. பார்வைத்திறன் கிடையாது. நான் பிரைலி முறையில் வாக்கைப் பதிவு செய்யும் வசதி வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளதா?

கண்பார்வை திறன் அற்ற வாக்காளர்கள் தங்களுடன் 18 வயது நிரம்பியவரை அழைத்து வந்து வாக்கு பதிவு செய்யலாம். தனியாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என நினைத்தால், தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் அனைத்திலும், பிரைலி வேட்பாளர்கள் பட்டியல் இருக்கும். அதை பார்த்து, வரிசைப்படி இயந்திரத்தில் வாக்களிக்கலாம்.

ஆர்.கேசவன் - நிலக்கோட்டை

இந்த தேர்தலில் ஆணையம் எவ்வளவோ முயற்சி எடுத்தும், ஓரளவுக்குதான் பணம் கொடுப்பதை தடுக்க முடிந்துள்ளது. முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் இடங்களில் அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆணையம் என்ன செய்துள்ளது?

தற்போது முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அதி செலவின தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, பறக்கும்படையினர் எண்ணிக்கையும் அதிரிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு உள்ளது. பொதுமக்கள் பணம் கொடுக்கப் படுவது தொடர்பான புகாரை 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ, 9444123456 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமோ, மாவட்ட கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசியிலோ தகவல் தெரிவிக்கலாம்.

என்.சந்திரமோகன் - வால்பாறை

மழை வந்தால் வாக்காளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாக்குச்சாவடிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா?

மழையின்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புக்கான பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் மழை வந்தால், காத்திருப்பு அறைகளில் இருந்து வாக்களிக்கலாம். டார்பாலின்களும் வழங்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்