சென்னையில் 14 நாட்களில் 1067 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்: காவல்துறை தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 14 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, 1,067 கிலோ 930 கிராம் குட்கா, புகையிலை பாக்கெட்டுகள், 91 கிலோ 890 கிராம் மாவா, ரொக்கம் ரூ.3,070 மற்றும் 1 ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், "புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை" (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த ஏப்.10 முதல் ஏப்.23 வரையிலான 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 385 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும், 1067 கிலோ 930 கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 91 கிலோ 891 கிராம் மாவா மற்றும் ரொக்கம் ரூ.3,070 மற்றும் 1 ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி (D-1) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த ஏப்.14 அன்று திருவல்லிக்கேணி பகுதியில் கண்காணித்து குட்கா புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த விஜயகுமார், ராஜகோபால், ஜோதிபாண்டி ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 123 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல், ஸ்வாகத், கூலிப் உள்ளிட்டகுட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அசோக்நகர் (R-3) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் ஏப்.15 அன்று அசோக்நகரில் பகுதியில் கண்காணித்து குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த பரூக்அலி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரிடமிருந்து 77.5 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல், கூலிப், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவல்லிக்கேணி ( D-1) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் ஏப்.20 அன்று காலை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள பிலாஸ் ஓட்டல் அருகில் உள்ள பீடா கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த அஜித்குமார், வேல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேற்படி கடையில் இருந்தும், இவர்கள் பதுக்கி வைத்த இடத்திலிருந்தும் 89.950 கிராம் எடை கொண்ட ஹான்ஸ், ரெமோ, விமல், கூலிப், எம்.டி.எம், ஸ்வாகத், ராயல் கிங், SS One, V1 உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவல்லிக்கேணி (D-1) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஏப்.22 அன்று காலை திருவல்லிக்கேணி, எல்லீஸ் சாலையிலுள்ள சக்தி கூல் பார் கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த மேற்படி கடையின் உரிமையாளர் செந்தில்குமார், வெற்றிவேல், ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 640 கிலோ கிராம் எடை கொண்ட ஹான்ஸ், ரெமோ, விமல், கூலிப், எம்.டி.எம், ஸ்வாகத், V1 உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1 ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

கொருக்குப்பேட்டை (H-4) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (ஏப்.23) கொருக்குப்பேட்டை, இளையமுதலி தெருவில் சட்டவிரோதமாக மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த ரஜினிகாந்த், ராமகிருஷ்ணன், ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 4 கிலோ மாவா, 28 கிலோ சீவல் பாக்குகள், 50 கிலோ ஜர்தா மற்றும் ரூ.2,320 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

கல்வி

6 hours ago

மேலும்