மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் ஞானரத யாத்திரையை தொடங்கிவைத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் ஞானரத யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன்உடனாய அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் ஆர்.என்ரவி நேற்றுவந்தார். அவரை ஆட்சியர் லலிதா,எஸ்பி நிஷா ஆகியோர் வரவேற்றனர். கோயிலில் தரிசனம் செய்த பிறகு தருமபுரம் ஆதீன மடத்துக்கு வந்த ஆளுநருக்கு பாஜக மாநிலதுணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசி பெற்றார். முன்னதாக, தருமபுரம் ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் தருமபுரம் ஆதீனகர்த்தர் பேசியதாவது: தமிழக ஆளுநரின் பெயர்ரவி. ரவி என்றால் சூரியன். தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களின் சின்னம் உதயசூரியன். எனவே, தமிழகத்துக்கு 2 சூரியன்கள் உள்ளன. பசுக்களை சரியாக பராமரிக்காததால்தான் கரோனாபோன்ற கொடிய தொற்றுகளுக்கு ஆளாகி உள்ளோம். எனவே, பசுக்களை முறையாக பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால்தான் பண்பாடு, கலாச்சாரம் சீர்கெட்டுப் போய்விட்டது. எனவே, கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தப் புனித இடத்துக்கு வந்த பிறகுதான் உண்மையான இந்தியன் என்ற உணர்வு ஏற்படுகிறது. குருமகா சன்னிதானம் சமயம் சார்ந்த பணிகள் மட்டுமன்றி, கல்வி மற்றும் மக்கள் நலப் பணிகளையும் செய்துவருகிறார். இயற்கை பேரிடர்களின்போது நாட்டுக்கும், மக்களுக்கும் நிறைய உதவிகளை செய்துள்ளார்.

ஆன்மிகத்திலும் முதலிடம்

அடுத்த 25 ஆண்டுகளில், நம் நாடு பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, ஆன்மிக வளர்ச்சியிலும் உலகில் முதலிடத்தில் விளங்கும். மதத்தால், மொழியால், உணர்வால் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும், அனைவரும் ஒரேகுடும்பம். இந்தியாவின் ஆன்மிகம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கப்பட்டது என்றார்.

இதைத் தொடர்ந்து, தெலங்கானாவில் நடைபெறவுள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் மேற்கொள்ளும் ஞானரத யாத்திரையை ஆளுநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதீனகர்த்தர் ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

ஆளுநருக்கு கருப்புக் கொடி

திருக்கடையூரில் இருந்து தருமபுரம் செல்லும் வழியில் மன்னம்பந்தல் அருகே ஆளுநர் வந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,விடுதலை சிறுத்தைகள், திராவிடர்கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு, தமுமுக உள்ளிட்டகட்சி மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி, அவருக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்தபோது, கருப்புக் கொடிகளை சாலையில் வீசி எறிந்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வேலு குபேந்திரன் உட்பட 77 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, தருமபுரம் ஆதீனத்திலிருந்து திருவாவடுதுறைக்கு சென்று கொண்டிருந்த ஆளுநருக்கு, மயிலாடுதுறை மேம்பாலம் அருகில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த திவிக மாவட்டச் செயலாளர் மகேஷ், விடுதலைசிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர் மோகன் குமார் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆளுநரின் வருகையையொட்டிமத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன் மேற்பார்வையில்டிஐஜிக்கள் தஞ்சாவூர் கயல்விழி, திருச்சி சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் 1,850 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

கல்வி

26 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

47 mins ago

தொழில்நுட்பம்

52 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்