வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்... தயார் நிலையில் ஆழ்வார்புரம் பகுதி!

By என்.சன்னாசி

மதுரை: கள்ளழகர் நாளை (சனிக்கிழமை) வைகை ஆற்றில் இறங்குகிறார். ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறக்கும் பகுதி தடுப்பு வேலிகள் அமைத்து சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை அழகர் கோயில் சுந்தராஜபெருமாள் கோயில் 10 நாள் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கவும், ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொள்ளவும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்காக சுந்தரராஜப் பெருமாள், நேற்று இரவு 7 மணிக்கு, கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி அழகர்கோயிலில் இருந்து கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைதடியுடன் கள்ளழகர் வேடத்தில், அலங்கரித்த தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். பொய்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக இன்று காலை 7 மணியளவில் மதுரை மூன்றுமாவடி பகுதியை வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்துச் செல்லும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் அழகரை வரவேற்றனர். கோவிந்தா கோஷம் எழுப்பி கள்ளழகரை தரிச்சித்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரைக்கு சுவாமி வருவதால் பக்தர்கள் அதிகமாக திரண்டு இருந்தனர். அவர்கள் செம்பில் சர்க்கரையில் சூடமேற்றிக்காட்டி அழகரை வணங்கினர். தொடர்ந்து புதூர், தல்லாகுளம் பகுதியிலுள்ள பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகருக்கு, அவரைப்போலவே வேடமணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

கள்ளழகர் இரவு சுமார் 9 மணியளவிற்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வருகிறார். கோயில் வாசலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பட்டு வஸ்தரங்களை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதைத் தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், நாளை சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு வருகிறார். அங்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வழியாக வைகை ஆற்றை அடைந்த பின், காலை சுமார் 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். முன்னதாக தல்லாகுளம், கோரிப்பாளையம் பகுதியில் விடிய, விடிய நடக்கும் எதிர் சேவை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்கின்றனர்.

கள்ளழர் வைகை ஆற்றில் இறக்கும் காட்சியைக் காண ஆழ்வார்புரம் பகுதி, வைகை ஆற்றின் இருகரை சாலைகளுலும், ஏவி மேம்பாலத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறக்கும் பகுதி தடுப்பு வேலிகள் அமைத்து சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுவாமி இறங்குவதற்காக தற்காலிக தொட்டி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் இறங்கிய பின்னர், வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கும் அதன் பிறகு 7 மணிக்கு மேல் வைகை ஆற்றில் இருந்து புறப்படும் கள்ளழகர் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின், ராமராயர் மண்டபம் சென்றடைகிறார். தொடர்ந்து மதிச்சியம், அண்ணாநகர் பகுதியிலுள்ள மண்டகப் படிகளிலும் எழுந்தருளிய பின்னர், இரவு வண்டியூர் வீரராக பெருமாள் கோயிலை சென்றடைகிறார். அதன்பின்பு நாளை மறுநாள் (ஏப்.17) 11 மணிக்கு வைகை ஆற்றுக்குள் இருக்கும் தேனூர் மண்டகப்படியில் எழுந்தருளி, மாண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் காட்சி நடக்கிறது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் கூடுவர் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநகர காவல்துறை செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்