மதுரை சித்திரை திருவிழாவுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன? - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் 

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரை சித்திரை திருவிழாவுக்கு தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பட்டியலிட்டு விளக்கினார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப்பணித்துறை) துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், "மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில், 10 லட்சம் மக்கள் கூடுவர். குறிப்பாக தேரோட்டம், திருக்கல்யாணமும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கும் அதிமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, தண்ணீர் திறந்துவிடுவது, பாதுகாப்பு வசதி, மருத்துவ வசதி, பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள், மண்டகப்படிகள் குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அரசு செய்திருந்த ஏற்பாடுகள் மக்களுக்கு தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தது. எனவே இந்த முறை அரசு என்னென்ன ஏற்பாடுகளை செய்துள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது பேரவைத் தலைவர் அப்பாவு, "ஏற்கெனவே மதுரையில் சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அரசு செய்துவிட்டது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

பின்னர் இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பதில்: > முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு திட்டமிட்டு செயல்படக்கூடிய அரசு. வரும் முன் காப்பதற்கு ஒரு அரசு உள்ளதென்றால், அது தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஒரு அரசாகத்தான் இருக்க முடியும்.

> வரும் 14-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறவிருக்கின்ற இந்த திருவிழாவுக்கு ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்டத்தின் மருத்துவ அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருடன் கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

> 20 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

> 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை செய்யப்பட்டிருக்கிறது.

> மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

> கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும், அதை ஒழுங்குபடுத்துவதற்கும் சுமார் 3,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

> நோய்த் தொற்றுப் பரவாமல் இருக்க மதுரை மாநகராட்சியின் உதவியோடு, சுகாதாரப் பணியாளர்களை நியமித்து குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

> 50 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்துதர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

> 40 இடங்களில் கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

> தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையன்று கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியதோடு, களத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்துள்ளனர்.

> கூடுதலாக தேவைப்படும் பணிகளை கவனிப்பதற்கு இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையாளர் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் நேற்றிலிருந்து அங்கு பணியில் இருக்கிறார்.

> அருகில் உள்ள மாவட்ட திருக்கோயில்களின் அனுபவமிக்க மூத்த இணை ஆணையர்கள் 4 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

> சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் அனைத்து தேவைகளும் நிறைவு செய்யப்பட்டு மகிழ்ச்சியோடு அங்கு இறை தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

> கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு தேவையான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீங்களும் வந்து தரிசனம் செய்யலாம், முறையாக அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

> இறை தரிசனதுக்கு உகந்த ஒரு ஆட்சியாக இந்த ஆட்சியிருக்கும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

இந்தியா

41 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்