அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மூடுவிழா: ஓபிஎஸ் கண்டனம் 

By செய்திப்பிரிவு

சென்னை: அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப் பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்ற செயல். ஒரு திட்டத்திற்கு மாற்றாக இன்னொரு திட்டத்தை கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "அதிமுக ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்ததப்பட்டு வந்த திட்டங்களான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த 2,500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை ரத்து செய்தது, அம்மா உணவகங்களின் பெயர்களை மாற்றுவது என்ற வரிசையில் அம்மா மகளிர் இரு சக்கர வாகனத் திட்டம் முடக்கப்பட்டு இருக்கிறது என்பதை நேற்று சூசகமாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழக சட்டப் பேரவையில் அறிவித்து இருப்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது.

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, பணிபுரியும் பெண்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருசக்கர வாகனத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவரது வாக்குறுதிக்கிணங்க, அம்மா மகளிர் இருசக்கர வாகனத் திட்டம் 2018 ஆம் ஆண்டு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி பாரதப் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட அற்புதமான திட்டமாகும்.

இத்திட்டத்தின்படி, இரு சக்கர வாகன விலையில் 50 விழுக்காடு அல்லது 25,000 ரூபாய் இதில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகை மானியமாக பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் பயனடைந்தனர். 2020-2021 ஆம் ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்தத் திட்டம் பெண்களிடையே மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றது.

இந்த நிலையில், நேற்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் , நகரப் பேருந்துகளில் பயணிப்பதற்கு தாய்மார்கள், சகோதரிகளுக்கு இலவசமாக பயணம் செய்கின்ற வாய்ப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் தந்து இருக்கிறார் என்றும், பெட்ரோல், டீசல் விலை இன்றைக்கு உயர்ந்திருக்கின்ற இந்த நிலையில் இரு சக்கர வாகனத் திட்டம் தொடர்ந்தால், இன்னும் அவர்களுக்கு மேலும் கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது, இந்தத் திட்டம் கைவிடப்பட்டு விட்டது என்பதுதான் இதற்குப் பொருள். திமுக அரசின் இந்தச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப் பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்ற செயல். ஒரு திட்டத்திற்கு மாற்றாக இன்னொரு திட்டத்தை கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இன்னும் சொல்லப் போனால், இலவசப் பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், நாட்கள் செல்ல செல்ல மகளிர் இலவசப் பேருந்து திட்டம் நீர்த்துப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மகளிர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திட்டம் அதிமுகஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதாலும், பிரதமரால் 'அம்மா' என்கிற அடைமொழியுடன் கூடியத் திட்டம் என்பதாலும், இத்திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒவ்வொரு திட்டத்திற்கும் மூடுவிழா நடத்தும் வேலையைத்தான் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.

'சொன்னதை செய்வோம்' என்பதைவிட 'சொல்லாததையும் செய்வோம்' என்பதுதான் கடந்த பதினோறு மாத கால திமுக ஆட்சியின் சாதனை. கொடியவன் என்று மக்களிடம் கெட்ட பெயர் வாங்கும் அரசனின் ஆட்சி விரைவில் வீழ்ந்து விடும் என்று வள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தினை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டுமென்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

விளையாட்டு

45 mins ago

ஜோதிடம்

37 mins ago

இந்தியா

57 mins ago

ஜோதிடம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

கல்வி

43 mins ago

சுற்றுலா

6 hours ago

மேலும்