ஜவுளித் தொழிலை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பஞ்சு விலையை குறைக்கவும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் பிரதானத் தொழில்களில் ஒன்றான ஜவுளித் தொழிலை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிவகுக்கும் வகையில், பஞ்சு விலையை குறைக்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தேசிய மற்றும் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் துறையாகவும், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற துறையாகவும், அந்நியச் செலாவணியை ஈட்டுகின்ற துறையாகவும் விளங்குகின்ற ஜவுளித் தொழில் துறையில் முன்னணி வகிக்கின்ற மாநிலமாக தமிழகம் விளங்குகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட இன்றியமையத்தன்மை வாய்ந்த துறையான ஜவுளித் துறை, பஞ்சு விலை உயர்வால் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றது. ஒரு கேண்டி எனப்படும் 356 கிலோ பஞ்சு 2020-21ம் நிதியாண்டு துவக்கத்தில் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அந்த ஆண்டு இறுதியில் 43 ஆயிரம் ரூபாய்க்கும், 2021ம் ஆண்டு இறுதியில் 64 ஆயிரம் ரூபாய்க்கும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

பஞ்சு விலை உயர்வு மற்றும் ஆடைகள் மீதான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்படுவது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி 21-12-2021 அன்று மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். இது குறித்து விரிவான அறிக்கையினையும் நான் வெளியிட்டு இருந்தேன். இதனையடுத்து, ஆடைகள் மீதான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதே சமயத்தில் பஞ்சு விலை உயர்வு தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

கடந்த 60 நாட்களில் மட்டும் பஞ்சு விலை கேண்டி ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் பஞ்சாலைத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலையேற்றம் காரணமாக மூலதனச் செலவு இரட்டிப்பாகி உள்ளதாகவும், இது அனைத்துத் துணிகளின் விலையை உயர்த்த வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தரமற்ற பஞ்சு வரத்தால் நூல் உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள ஆலைகள் பல்வேறு வழிகளில் நூல் உற்பத்தியினை குறைத்துள்ளதாகவும், நூற்பாலைகள் உற்பத்தியை குறைத்தது காரணமாக தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றும், தொழில் முடங்கிவிடும் என்றும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

இந்த அபரிமிதமான விலையேற்றத்திற்கு காரணமாக பதுக்கல் மற்றும் யூக வணிகத்தை குறிப்பிடும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான 11 விழுக்காடு வரியை நீக்கினால் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும், பஞ்சு விலை குறைப்பு என்பது மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்தால்தான் சாத்தியமாகும் என்றும் தெரிவிக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் பஞ்சு விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளன.

எனவே, தமிழகத்தின் பிரதானத் தொழில்களில் ஒன்றான ஜவுளித் தொழிலை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிவகுக்கும் வகையில், பஞ்சு விலையை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், தமிழக அரசும் எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்