வளர்ச்சி திட்டங்களின் நிலை என்ன? - முதல்வர் தலைமையில் மார்ச் 10 முதல் 12 வரை மாநாடு: ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மாவட்ட நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாநாடு வரும் மார்ச் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மார்ச் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை உள்ள நாட்களில் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொள்வார்.

அரசு கடந்த பத்து மாதங்களில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், ஆளுநர் உரை, முதல்வரின் செய்தி வெளியீடு மற்றும் சட்டமன்ற பேரவை விதி எண். 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை, அமைச்சர் பெருமக்களால் மானிய கோரிக்கைகளின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என மொத்தம் 1,704 அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டு, அதில் 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புகளின் கீழ் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாட்டை, மாவட்ட ஆட்சித் தலைவர்களின் மூலமாக அறிந்து கொள்வதற்காகவும், அவற்றை மேலும் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதுவரை வனத்துறை அலுவலர்கள் முதல்வரின் ஆய்விலோ மாநாட்டிலோ கலந்து கொண்டதில்லை. முதல் முறையாக வனத்துறை அலுவலர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வனத்துறை தொடர்பான திட்டங்களை முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த 3 நாட்கள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விரிவான ஆய்வினை முதல்வர் மேற்கொள்வார்.

மேலும், வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாயிலாக அறிந்து, அதன் அடிப்படையில் சிறப்பான திட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்