போர் பதற்றச் சூழலில் 24 மணி நேர பயணம்: உக்ரைனிலில் இருந்து திரும்பிய குன்னூர் மாணவியின் அனுபவம்

By ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்: போர்ச் சூழலில் 12 மணி நேரம் பேருந்திலும், 12 மணி நேரம் ரயிலிலும் பயணித்து உக்ரைனிலிருந்து வெளியேறி ஹங்கேரியை அடைந்து, அங்கிருந்து இந்தியா திரும்பியதாக குன்னூர் மாணவி சாய்சோனு தனது பயண அனுபவத்தை விவரித்துள்ளார்.

உக்ரைனில் மருத்துவம் படித்த கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் 10 மாணவர்கள் ஹங்கேரி வழியாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து நேற்று இரவு கோவை விமான நிலையத்துக்கு வந்தனர்.

இதில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த மாணவி சாய்சோனுவை கோவை விமான நிலையத்தில் அவரது பெற்றோர் சாய்நாத் மற்றும் யுகேஸ்வரி கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர், இன்று காலை நீலகிரி மாவட்டம் குன்னூர் வந்த மாணவி சாய்சோனுவுக்கு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, நலம் விசாரித்தார்.

உக்ரைனில் நிகழ்ந்த துயரச் சம்பவம் பற்றி குன்னூர் மாணவி சாய்சோனு கூறும்போது, "நான் உக்ரைனில் உள்ள வென்சிலா பகுதியில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். என்னுடன் தமிழகம், இந்தியாவை சேர்ந்த மாணவிகளும் படித்து வந்தனர். போர்ப் பதற்றம் என அறிவித்ததும், 15 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர் என அனைத்தையும் வாங்கிக் கொண்டோம். இருப்பினும் உக்ரைனில் நீடித்த போர் பதற்றத்தால் அங்கிருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். என்னுடன் படித்த இந்தியர்களும் நாட்டிற்கு செல்ல தயாராகினர்.

இதையடுத்து அனைவரும் உக்ரைனின் மேற்கு பகுதி அருகே இருக்கும் ருமேனியா எல்லைக்கு செல்வதற்கு தயாரானோம். ஆனால், அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக வந்த தகவலால் திட்டத்தை மாற்றி, ஹங்கேரிக்கு பேருந்தில் பயணித்தோம். என்னுடன் சேர்த்து மொத்தம் 40 பேர் பயணமாகினோம். அனைவரும் இந்திய தூதரகம் அறிவுறுத்திய படி இந்திய தேசிய கொடியை அணிந்துகொண்டு பயணமானோம்.

நாங்கள் இருந்த இடத்தில் இருந்து ஹங்கேரிக்கு பேருந்தில், ஒரு நபருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. 12 மணி நேர பயணித்துக்கு பிறகு ஹங்கேரி எல்லையில் உள்ள உக்ரோத் ரயில் நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து ரயிலில் மீண்டும் 12 மணி நேரம் பயணித்து ஹங்கேரியை அடைந்தோம். எல்லைப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவியது. குளிரை பொருட்படுத்தாமல், ஊருக்கு செல்வதிலேயே கவனம் செலுத்தினோம்.

எங்களை ஹங்கேரி பகுதியில் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். எங்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து, எங்களை மிகவும் பாதுகாப்பாக பார்த்து கொண்டனர். எங்களை 24 மணி நேரம் கண்காணித்து, தேவையானதை வழங்க தனியாக அதிகாரிகளையும் நியமித்திருந்தனர். அவர்கள் எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தோம். அங்கு மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து, எனது ஊரான குன்னூருக்கு வந்தடைந்தேன். போருக்கு மத்தியில் உயிரைக் கையில் பிடித்து கொண்டு தற்போது ஊருக்கு வந்தது சேர்ந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை மீட்க அனைத்து உதவிகளையும் செய்த மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்றார் மாணவி சாய்சோனு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

14 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்