தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்றுங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவினை சுட்டிக் காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹரியாணா மாநில தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வழங்குவதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு இயற்றிய சட்டத்திற்கு ஹரியாணா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மூலம், அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் குவிவதாகவும், அதனால் நிறுவப்படும் புதிய தொழிற்சாலைகள் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், படித்த, தொழிற்பயிற்சி பெற்ற தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை கிடைத்ததாக எந்த செய்தியும் வருவதில்லை.

இதற்குக் காரணம் தமிழகத்தில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தாரை வார்க்கப்படுவது தான். இதற்கு முடிவு கட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவின் தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றான ஹரியாணாவிலும் இதே நிலை நிலவுவதால், அங்குள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமளிக்கும் நோக்குடன், அம்மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.30,000 வரை ஊதியம் கொண்ட வேலைகளில் 75% உள்ளூர் மக்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி கடந்த நவம்பர் மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தை எதிர்த்து தொழில் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம், உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. அந்தத் தடையை தகர்த்துள்ள உச்சநீதிமன்றம், இது குறித்த வழக்கை 4 வாரங்களில் விசாரித்து இறுதித் தீர்ப்பை வழங்கும்படி ஹரியாணா நீதிமன்றத்திற்கு ஆணையிட்டுள்ளது.

தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஹரியாணா மாநிலத்தில் மட்டும் நடைமுறையில் இல்லை.ஆந்திரத்தில் தனியார் நிறுவன பணிகளில் 75% உள்ளூர் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனால், கும்மிடிப்பூண்டியில் உள்ள தமிழக இளைஞர்கள், அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலையில் சேர முடியாது. தெலங்கானாவில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கினால் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் பொதுத்துறை, தனியார்துறை கூட்டு முயற்சி திட்டங்கள், சிறிய நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்புகளிலும் உள்ளூர் ஒதுக்கீடு உள்ளது. இதனால், இந்த மாநிலங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை.

தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள ஆந்திரம், தெலங்கானம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைக்காது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள வேலைகள் பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்களால் முடியவில்லை. 1998ம் ஆண்டில் சென்னை மறைமலைநகரில் போர்டு மகிழுந்து ஆலை தொடங்கப்பட்ட போதே, அதில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று 10,000 பேரைத் திரட்டி எனது தலைமையில் போராடினேன். அன்றைய நிலைமை இன்றும் மாறாதது பேரவலம்.

இந்த நிலையை மாற்றி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80% வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது ,தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். மார்ச் மாதத்தில் கூடவிருக்கும் சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரிலேயே இச்சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

38 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்