நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக தனித்து நிற்குமா? - அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: "கூட்டணியில் இருந்து பிரிந்ததற்கான காரணத்தை பாஜகவோ, அதிமுகவோ இதுவரை கூறவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக தனித்து நிற்குமா?" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜவுக்கு ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து நிற்கிறது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை. ஏன் அதிமுகவுடன் கூட்டணியில் இல்லை. அந்தக் கூட்டணியில் இருந்து பிரிந்ததற்கான காரணத்தை பாஜகவோ, அதிமுகவோ இதுவரை கூறவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக தனித்து நிற்குமா? இவைகளெல்லாம் அரசியலில் தெளிவுப்படுத்த வேண்டிய ஒரு தார்மிக கடமை, எனவே அதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கும் இருக்கிறது.

உதாரணமாக, கருணாநிதி இருந்தபோது, காங்கிரஸும், திமுகவும் தனித்து நின்றார்கள். அதன்பின்னர், திமுகவும் காங்கிரஸும் இணைய வேண்டிய ஒரு சூழல் வந்தபோது, கருணாநிதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அழைத்து வந்து, "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சித் தருக" என்று அந்தக் கூட்டணிக்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்தினார்.

ஒரு கூட்டணியில் சேரும் போதும், அந்த கூட்டணியில் இருந்து பிரியும்போதும் அதற்கான காரணத்தை கூற வேண்டும். அதுவொரு அரசியல் கட்சியின் கடமை. ஆனால் பாஜகவும் அதிமுகவும் இரவில் பேசுகிறார்கள், பகலில் தனித்தனியாக வருகிறார்கள். ஒன்று எடப்பாடி பழனிசாமியோ அல்லது அண்ணமலையோ கூட்டணியிலிருந்து பிரிந்ததற்கான விளக்கத்தைக் கூறவில்லை என்றால், அவர்களுடைய அரசியல் மாண்பும், அரசியலின் குணநலன்கள் முற்றிலுமாக மக்களால் சந்தேகிக்கப்படும். இவர்களை நம்ப மறுப்பார்கள், இதுவொரு கள்ளத்தனமான செயல். எனவே இவர்கள் இதற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

1967-ல் ராஜாஜி திமுகவை ஆதரித்தார். அதற்கான காரணத்தை கூறினார். அதிமுகவும் பாஜகவும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். கூட்டணியிலிருந்து விலகியது தொடர்பாக தெளிவாக ஒன்றும் சொல்ல முடியவில்லை, அதற்கான நெஞ்சுரம், அரசியல் நேர்மை அந்த கட்சிகளுக்கு கிடையாது. எப்படி மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவீதம் திமுக கூட்டணி வெற்றிபெறும். இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தியாவில் பாஜக 13 மாநிலங்களில்தான் ஆட்சி செய்கிறது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் இந்தியாவில் சாத்தியம் இல்லை. இந்தியா என்பது ஒரு தேசமே தவிர ஒரு நாடு இல்லை. பல நாடுளின் கூட்டுதான் இந்தியா. 534 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து தான் இந்தியாவை படேல் உருவாக்கினார்.

தமிழ்நாடும் ஒரு நாடு. குஜராத் ஒரு நாடு. இந்தியா ஒரு தேசம். இதை நீண்ட காலமாக காங்கிரஸ் சொல்லி வருகிறது. பாஜகவுக்கு நாட்டுக்கும், தேசத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பி போகிறார்கள். இந்தியாவில் வேரூன்றியிருக்கிற ஜனநாயகத்தை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கலைத்துவிட்டு, தமிழகத்தில் 2024-ல் தேர்தல் வரும் எனக்கூறுவதெல்லாம், "அத்தைக்கு மீசை முளைத்தால்" என்பதை போன்றது, எனவே அப்போது அதைப்பற்றி பேசலாம். காவல்துறை குறித்து பேசிய, சி.வி.சண்முகத்துக்கு புரிகிற மொழியில் பொன்முடி பதிலளித்திருக்கிறார்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்