தமிழகத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள இந்து கோயில்களை மட்டுமே இடிப்பதாக கூறி வழக்கு: ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள இந்து கோயில்களை மட்டும் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இந்து முன்னணிமாநில செய்தித் தொடர்பாளரான சென்னை கொளத்தூரைச் சேர்ந்த டி.இளங்கோ, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:

தமிழகம் முழுவதும் 47,707 ஏக்கர்பரப்பில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இதில் 10,556 ஏக்கர் நிலங்கள் குடியிருப்பு பகுதிகளுக்காகவும், 1,500 ஏக்கர்நிலங்கள் வணிக நிறுவனங்களுக்காகவும், 32,024 ஏக்கர் நிலம் பாசனபகுதிகளுக்காகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அரசு கட்டிடங்கள் 1,311ஏக்கர் பரப்பில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

மொத்தமாக நீர்நிலைகளில் மட்டுமே 4 லட்சத்து 40 ஆயிரத்து 927 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது. இவ்வளவு ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு, நீர்நிலை பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சுமார் 200 இந்து கோயில்களை மட்டும் தமிழக அரசுதிட்டமிட்டு இடித்து வருகிறது. இதில்பல கோயில்கள் நூறாண்டு பழமைவாய்ந்தவை. கடந்த 2016-ல் நாமக்கல் மாவட்டத்தில் சோழீஸ்வரர் கோயில், 2017-ல் தஞ்சாவூர் மாவட்டம் மணம்பாடியில் நாகநாதசுவாமி கோயில், ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் சிவன் கோயில், 2020-ல் தஞ்சாவூர் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள ஆதிமாரியம்மன் கோயில், 2021-ம் ஆண்டு கோவை முத்தண்ணன்குளம் பண்ணாரி அம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி கோயில், முனீஸ்வரன் கோயில், மதுரை ஒத்தக்கடையில் உள்ள கோயில், சிவகங்கை மாவட்டம்காளையார்கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், இந்த ஆண்டுகாஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர் வரதராஜபுரத்தில் உள்ள நரசிம்ம ஆஞ்சநேயர் கோயில் என பல இந்துகோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசு புறம்போக்கு அல்லது நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்து ஆலயங்கள் மட்டுமின்றி மற்ற எந்த மத வழிபாட்டுத்தலங்கள் இருந்தாலும் அவற்றை இடித்து அகற்றும் முன்பாக வேறுஇடங்களுக்கு மாற்றவோ, அந்தப் பகுதிகளை முறைப்படுத்தி மறுவரையறை செய்யவோ திட்டம் வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்து கோயில்கள் மட்டும் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.சாய் தீபக், வழக்கறிஞர்கள் கே.எஸ்.ஈஸ்வரன், பாலாஜி ஆகியோர் ஆஜராகி ‘‘தமிழகத்தில் அனைத்து மதங்களைச்சேர்ந்த வழிபாட்டு தலங்களும் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்தாலும் இந்து கோயில்கள் மட்டுமே எவ்வித ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல் இடிக்கப்படுகின்றன.

பிற மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தமிழகஅரசு பாரபட்சமாக செயல்படுகிறது. ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ளவழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தவும், மாற்று இடம் ஒதுக்கவும் திட்டம் வகுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அதுபோல எந்தவொரு திட்டமும் இல்லை’’ என வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்குநிலங்களில் உள்ள இந்து கோயில்கள் மீது மட்டுமே பாரபட்சமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவதற்கு உரிய ஆதாரங்களுடன் மனுதாரர் விரிவான மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றனர். மேலும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு எந்தவொரு பாரபட்சமும் காட்டக்கூடாது என்றும், குறிப்பிட்ட மத வழிபாட்டு தலங்கள் மீதுமட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது அரசுக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும் என்றும், கோயில்நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடந்த 2003 முதல்2022 வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்தவிவகாரத்தில் அறநிலையத் துறை ஆணையரும் கடமை தவறுவதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

5 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

29 mins ago

க்ரைம்

35 mins ago

க்ரைம்

44 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்