பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக, திமுகவினர் அதிருப்தி

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் (தனி) தொகுதியில் அதிமுக, திமுக என பிரதான கட்சிகளின் வேட்பாளர் தேர்வில், 2 கட்சிகளின் தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக திமுக, அதிமுக வேட்பாளர்களையே மாற்றி மாற்றி தேர்வு செய்த பின்னணி பெரம்பலூர் தொகுதிக்கு உண்டு. இம்முறை அதிமுக எம்எல்ஏ-வாக இருக்கும் இளம்பை ரா.தமிழ்ச்செல்வனையே மீண்டும் வேட்பாளராக அறிவித்ததாலும், திமுக சார்பில் கூட்டணிக் கட்சிக்கு தொகுதியை தாரை வார்த்ததாலும் 2 கட்சிகளின் தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ரா.தமிழ்ச்செல்வன். தனது செயல்பாடுகளால் கட்சி மற்றும் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் பொய்யாக்கினார் என்கிறார்கள் அதிமுக விசுவாசிகள். கட்சி மேலிடத்தில் செல்வாக்கான சிலருடன் நெருக்கமாக இருந்தால் போதும் என்று தொண்டர்களை அலட்சியப்படுத்தினார் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது மீண்டும் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து முதல்வரின் சென்னை இல்லத்துக்கே சென்று பெரம்பலூர் அதிருப்தியாளர்கள் புகார் மனு அளித்தனர். நேற்று முன்தினம் கண்டன போஸ்டர்களையும் ஒட்டினர்.

அதிருப்தியாளர்கள் போராட்டம் குறித்து எம்எல்ஏ தமிழ்செல்வன் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அதிமுக நிர்வாகிகள் தரப்பில் கூறும்போது, “அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா யாரை கை நீட்டினாலும் நாங்கள் வெற்றி பெறச்செய்வோம். தமிழ்ச்செல்வனுக்கு அதிருப்தி இருப்பது உண்மைதான்” என்றனர்.

திமுகவினர் சோர்வு

பெரம்பலூரில் அண்மையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆ.ராசா உறுதியளித்தபடி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக தங்களில் ஒருவரை தேர்வு செய்யாமல், தொகுதியை கூட்டணிக்குத் தாரை வார்த்ததில் திமுகவினர் சோர்ந்திருக்கின்றனர். திமுக கூட்டணியில் உள்ள சமூக சமத்துவ படை கட்சியின் நிறுவன தலைவர் ப.சிவகாமி இத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து ஆ.ராசாவின் ஆதரவாளர்கள் கூறியபோது, “பெரம்பலூர் திமுகவினரை பொறுத்தவரை அண்ணன் ராசாதான் எங்களுக்கு எல்லாமே. அதனால் ராசா சுட்டிக்காட்டும் எவரையும் வெற்றி பெறச்செய்வோம். திருமாவளவன் இல்லாத குறைக்கு தலித் அமைப்பு ஒன்றுக்கு கூட்டணியில் வாய்ப்பளிக்கும் வகையில் சிவகாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். கட்சித் தலைமையின் இந்த முடிவுக்கு கட்டுப்படுகிறோம். ஆனால், ஆ.ராசாவுக்கு எதிராக சிவகாமி இதற்கு முன்னர் பேசியவற்றை வீடியோ பதிவுகளாக சமூக ஊடகங்களில் அதிருப்தியாளர்களும், அரசியல் எதிரிகளும் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து சிவகாமி விளக்கம் தராது மவுனம் சாதிப்பது திமுக தொண்டர்களை சோதிக்கிறது. திமுக தொண்டர்களை சோர்வகற்றி பணியாற்ற வைப்பது எப்படி என்பதை ஆ.ராசா அறிவார். கட்சியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவாவது சிவகாமியை எப்படியும் வெற்றியடையச் செய்வார்” என்றனர்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்