விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான்... - 7.5% உள் ஒதுக்கீட்டில் மாநில 2-ம் இடம்பிடித்து எம்எம்சி-யில் சேரும் அரசுப் பள்ளி மாணவர் பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார், மாநில அளவில் 2-வது இடம்பிடித்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பிரகாஷ் ராஜ்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆனந்தல்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி சேட்டு மகன் பிரகாஷ்ராஜ். இவர், மன்சுராபாத் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பை, கடந்த 2018-ஆம் ஆண்டு முடித்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் 950 மதிப்பெண் பெற்றுள்ளார். 2018 மற்றும் 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் பங்கேற்று 130 மற்றும் 341 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனாலும், மருத்துவக் கனவு நிறைவேற 3-வது முயற்சியாக, கடந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் பங்கேற்றார். அதன் முடிவுகள் வெளியானது. அதில், 512 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், மாநில அளவில் 2-வது இடத்தையும் மற்றும் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ், சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்து, தனது மருத்துவக் கனவின் முதல் படியில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இது குறித்து மாணவர் பிரகாஷ் ராஜ் கூறும்போது, “விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், மருத்துவராக வேண்டும் என்பது சிறு வயதின் கனவாகும். எனது முயற்சிக்கு தந்தை சேட்டு, தாயார் தங்கம், சகோதரர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். 2018-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 950 மதிப்பெண் பெற்றேன். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றேன். அப்போது பயிற்சிக்கு ஏதும் செல்லவில்லை. ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலமாக நீட் தேர்வு எழுதினேன். முதல் முறை 130 மதிப்பெண்ணும், 2-வது முறை 341 மதிப்பெண்ணும் பெற்றேன். 2-வது முறை எழுதிய நீட் தேர்வு மூலமாக, பல் மருத்துவம் படிப்பை சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், அதில் நான் சேரவில்லை.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை, தமிழக அரசு கொண்டு வந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக படித்தேன். பின்னர், 3-வது முறையாக கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதினேன். அதில் 512 மதிப்பெண் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இடஒதுக்கீடு அடிப்படையில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளேன். சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். எம்பிபிஎஸ் படித்துவிட்டு, இருதயம் அல்லது சிறுநீரகம் சார்ந்த உயர் மருத்துவக் கல்வியை படிக்க திட்டமிட்டுள்ளேன். மருத்துவம் படித்து, கிராமப்புற மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க பயனுள்ளவனாக இருப்பேன்” என்றார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள மாணவர் பிரகாஷ் ராஜ்க்கு சேத்துப்பட்டு வட்டாட்சியர் கோவிந்தராஜன், ஆசிரியர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

15 mins ago

க்ரைம்

21 mins ago

க்ரைம்

30 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்