நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் | மநீம-வுக்கு மிகப் பெரிய திருப்புமுனை: 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 154 வேட்பாளர்களின் மூன்றாம் கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, உள்ளாட்சியில் தன்னாட்சி" என்பது மக்கள் நீதி மய்யம் பயணிக்கும் பாதை. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உலகத் தரத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனும் லட்சிய தாகம் நமக்கு உண்டு. கிராம சபைகளாகட்டும், உள்ளாட்சித் தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வலியுறுத்துவதாகட்டும், முந்திக்கொண்டு ஒலிக்கும் குரலும் முன்சென்று களம் காணும் கரங்களும் நம்முடையவைதான்.

ஒருங்கிணைந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளூர் தன்னாட்சி சட்டத்தை நிறைவேற்றுவது; மக்களுக்கு தடையற்ற சேவைகளை உறுதிசெய்ய, ஸ்மார்ட்போன்கள் மூலம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளையும் ஆன்லைன் மயமாக்குதல்; மழை வெள்ளத்தின் தாக்கத்தைத் தடுக்க, சிங்கப்பூரில் இருப்பதுபோல் சர்வதேச தரத்திலான நிரந்தரத் தீர்வு; சென்னையின் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு; ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவது;

நகர்ப்புற தன்னாட்சி அமைப்புகளில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வார்டு கமிட்டிகள் மற்றும் ஏரியா சபைகள், ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான துரித நிர்வாகம் உள்ளிட்ட எண்ணற்ற தனித்துவம்மிக்க செயல்திட்டங்களை நாம் நமது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம். இவற்றை நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் நகர்ப்புறங்களில் நாம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். `ஊழலிலும் லஞ்சத்திலும் திளைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நேர்மையும் திறமையும் வாய்ந்த உறுப்பினர்கள் கிடைக்கமாட்டார்களா?! எனும் ஆதங்கம் தமிழக மக்களிடம் இருக்கிறது.

பல ஆண்டுகளாகக் கதறியும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும் தெருவிலும் இருக்கின்றன. தேர்தலில் வென்று அவற்றைத் தீர்த்தாகவேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கின்றன. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக சென்னை, தாம்பரம், மயிலாடுதுறை, ஓசூர், மதுரை, பொள்ளாச்சி மற்றும் நாகப்பட்டினம் தொகுதியில்ப் போட்டியிட இருக்கும் தகுதிசால் வேட்பாளர்களின் 154 மூன்றாம் கட்ட பட்டியலை இன்று வெளியிடுகிறேன். வேட்பாளர்கள் இக்கணம் முதல் வெற்றி ஒன்றையே இலக்காகக்கொண்டு ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது கொள்கைகள், செயல் திட்டம், சின்னம் ஆகியவற்றைக் கொண்டுசேர்க்க வேண்டும். இவர்களை வெற்றியடையச் செய்யும் கடமை, நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நாம் ஒரு படையாகத் திரண்டு உழைக்க வேண்டும்.

நடைபெறவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், மக்கள் நீதி மய்யத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். நமது உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் உள்ளாட்சிகள், ஒரு முன்மாதிரி மாடலாக இந்தியா முழுக்கப் பேசப்படும் காலம் அருகில் வந்துவிட்டது. அந்தந்தப் பகுதிகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்கி இமைப்பொழுதும் சோர்வடையாமல் உழையுங்கள். என்னைப் பொறுத்தவரை உயர்ந்த நோக்கம், நேர்மை, திறமை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவைதான் ஒரு மனிதனை வெற்றியை நோக்கிச் செலுத்தும் விசைகள். அடுத்தடுத்த பட்டியல் விரைவில் வெளியாகும்" என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

விளையாட்டு

13 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

55 mins ago

ஓடிடி களம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்