தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: நீதிபதி முன்னிலையில் பெற்றோர் ரகசிய வாக்குமூலம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது பெற்றோரிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேற்று ஆஜராகிய மாணவியின் பெற்றோர், தனித்தனியாக இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் அளித்தனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளி அருகே தங்கியிருந்த அவர்,விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதாக கூறி, அண்மையில் விஷம் குடித்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றிகடந்த ஜன.19-ம் தேதி உயிரிழந்தார்.

தனது மகளின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மகளின் உடலைப் பெற மாட்டோம் என்று மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். மாணவியின் மரணத்துக்கு மத மாற கட்டாயப்படுத்தியதுதான் காரணம் என்றும் புகார் கூறினர்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது மகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். விடுதி வார்டன் சகாயமேரி, நிர்வாகி ராக்லின்மேரி மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி, ‘‘மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அதை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து ஜன.24-ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர், சொந்த ஊரில் தகனம் செய்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வாக்குமூலம் அளிப்பதற்காக மாணவியின் பெற்றோர், தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு நேற்றுவந்தனர். அவர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைந்ததும் நுழைவுவாயில் மூடப்பட்டது. வழக்கறிஞர்கள், போலீஸார், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தஞ்சாவூர் நீதித்துறை மூன்றாம் எண் நடுவர் பாரதி முன்னிலையில், மாணவியின் பெற்றோர் இருவரும் தனித்தனியாக ஆஜராகி தங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். முற்பகல் 11.55 மணிக்கு தொடங்கிய ரகசியவாக்குமூலம், பிற்பகல் 2.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குமூலம் பெறும் நிகழ்ச்சி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பின்னர், மாணவியின் பெற்றோர் வெளியே வந்ததும் அவர்களை அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் அய்யப்பன் தலைமையில் வந்திருந்த 10 பேர் காரில் அழைத்துச் சென்றனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜன.24) நடக்க உள்ள வழக்கு விசாரணையின்போது, மாணவியின் பெற்றோரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் சீலிடப்பட்ட கவரில் வைத்து ஒப்படைக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

கருத்துப் பேழை

18 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்