தொடர் மழையால் மேய்ச்சல் நிலங்கள் பரப்பு அதிகரிப்பு: உடுமலையில் வேகமெடுக்கும் ஆடு வளர்ப்பு தொழில்

By எம்.நாகராஜன்

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் ஆடு வளர்ப்பில் தனிகவனம் செலுத்தி வருகின்றனர். இது, அவர்களின் பொருளாதார தேவைகளுக்கு உதவுவதோடு, வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பயன் அளித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவிய மழையின்மையால் கடும் வறட்சி நீடித்தது. அதனால், ஆடு வளர்ப்போர் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டுதொடர்ச்சியாக பெய்த பருவமழையால் அணைகள், குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன. நிலத்தடி நீர்மட்டமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன்மூலமாக, வறட்சியாக காணப்பட்ட மேய்ச்சல் நிலத்தின் பரப்பு பல மடங்கு அதிகரித்து பசுமையாக மாறியுள்ளது. இது ஆடு வளர்ப்புக்கு உகந்த சூழலாகும்.

இதுகுறித்து ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருவோர் கூறும்போது, "ஆடு வளர்ப்பில் 2 முறை உள்ளது.பரண் அமைத்தல், திறந்தவெளியில் வளர்த்தல் ஆகும். பரண் அமைப்பு முறையில் வெள்ளாடுகளுக்கு நாளொன்றுக்கு அதன் வயதுக்கேற்ப அடர்தீவனம் அளித்தல் அவசியம். ஒரு மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும், 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் 50 கிராம் முதல்100 கிராம் வரையிலும், சினைப்பருவத்தில் 175 கிராம், ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிப்பது சிறப்பாக இருக்கும்.

அதேபோல, அடர் தீவனமாக மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ, ராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ, கடலைப்புண்ணாக்கு 20 கிலோ, கோதுமை தவிடு, அரிசி தவிடு 10 கிலோ, துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17 கிலோ, தாது உப்பு 2 கிலோ, சாதாரண உப்பு ஒரு கிலோ என்ற அளவில் 100 கிலோ அடர்தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.

கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆண்டுக்கு 4 முறை ஆடுகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். வணிக முறையில், பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலமாக நோய் தாக்கும்வாய்ப்பு குறைவு. இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும். தற்போதைய நிலையில் மொத்த விலையில் கிலோ ரூ.250 எனவும்,ஆடு ஒன்று ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனையாகிறது. திறந்தவெளி ஆடு வளப்பிலும், ஆடுகளுக்கு உரிய தீவனமுறைகளை பின்பற்ற வேண்டும். நடப்பாண்டு ஆடு வளர்ப்புக்கு உகந்த சூழலை இயற்கை அளித்துள்ளது" என்றனர்.

கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, ‘‘உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரங்களில் ஆடு வளர்ப்பு தொழில் உத்வேகமெடுத்துள்ளது. பல்வேறு ஊர்களில், திரும்பிய திசைகளில் எல்லாம் வெள்ளாடு, செம்மறி ஆட்டுக் கூட்டங்களை காண முடிகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்