தமிழக அரசின் வழிகாட்டுதல்படி 13.47 லட்சம் பேரின் நகைக் கடன் தள்ளுபடி: ஒப்புதல் பெற்ற பின் நடவடிக்கை எடுக்க கூட்டுறவு பதிவாளர் உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் வழிகாட்டுதல்படி 13 .47 லட்சம் நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான இறுதிக்கட்ட நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும், இறுதி ஒப்புதல்பெற்ற பின்னரே, கடன் தள்ளுபடிநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதற்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவ. 13-ம் தேதி அறிவித்தார். பின்னர், இதற்கான அரசாணையும், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

அதனடிப்படையில், மாவட்டந்தோறும் உத்தேச பயனாளிகள் பட்டியல், தகுதி பெறாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டது.

பின்னர், நகைக் கடன்களை கள ஆய்வு செய்ய அயல் மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் குழுஅமைக்கப்பட்டது. சேலம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சரிபார்ப்புப் பணிகள் முடிந்து, தகவல் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணி முடிவடைய காலதாமதமாகும் என்பதைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பை கருதியும் சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்போது 13,47,033நகைக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்கெனவே மண்டலஇணைப் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட 48,84,726 நகைக் கடன் விவரங்கள் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் 35,37,693 கடன்களுக்கு, அரசாணையில் கூறப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படாத பயானாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, 2021-ல் பயிர்க் கடன்தள்ளுபடி பெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர், நகைக் கடனை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேல் கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள்,சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ரேஷன்கார்டு எண், ஆதார் எண் வழங்காதவர்கள், எந்தப் பொருளும் வேண்டாத ரேஷன் கார்டுதாரர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக் கடன் மூலம் 40 கிராமுக்கும் அதிகமாக பெற்ற அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படாது.

இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தள்ளுபடிக்கு தகுதி பெறும்நகைக் கடன்தாரர்களின் மாவட்டவாரியான பட்டியல், அந்தந்த மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோரின் விவரங்களை, அதற்கான படிவத்தில் குறிப்பிட்டு டிச. 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்றிருந்தும், பட்டியலில் விடுபட்டிருந்தால், அதையும் உரிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும். கடன்தள்ளுபடிக்கு தகுதி பெற்றவர்களுக்கு, பதிவாளர் அலுவலகத்தில் இறுதி ஒப்புதல் பெற்ற பின்னரே, கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

இந்தியா

15 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்