உள்நோயாளியாக சிகிச்சைக்குச் சேரும் 50 வயதைத் தாண்டியவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By ஜெ.ஞானசேகர்

''தமிழகத்தில் அரசு மாவட்ட மருத்துவனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சைக்குச் சேர்க்கப்படும் 50 வயதைத் தாண்டிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது'' என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல் மையம், படுக்கைப் புண்கள் பராமரிப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, கரோனா தொற்றைக் கண்டறிய உதவும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவியை மருத்துவமனைக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, ப.அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

''மணப்பாறை அருகேயுள்ள கண்ணுடையான்பட்டி சிப்காட் வளாகத்தில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்ட 142.5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்புக் கலன் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 220 மெட்ரிக் டன் கொள்ளளவு ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பு வைக்கும் நிலைதான் ஏற்கெனவே இருந்தது. அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக 1,310 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜனைச் சேமித்து வைக்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனுக்கு இதுபோன்ற கட்டமைப்பு நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

அரசு மாவட்ட மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகச் சேர்க்கப்படும் 50 வயதைத் தாண்டிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனை திட்டம் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், முதுகுத் தண்டுவடப் பாதிப்பு உட்பட பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் படுக்கையில் நீண்ட காலம் படுத்தேயிருக்க வேண்டியவர்களுக்கு படுக்கைப் புண் ஏற்படும். இவர்களைக் காப்பாற்றும் வகையில் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளதுபோல், அனைத்து அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் தலா 10 தண்ணீர் படுக்கைகளுடன் கொண்ட பிரத்யேகப் பிரிவு தொடங்கப்படவுள்ளது.

தமிழத்தில் 69 அரசு மருத்துவமனைகளில் 71 ஆர்டிபிசிஆர் கருவிகள் நிறுவப்பட்டு லட்சக்கணக்கானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு நாளைக்கு 1,88,500 பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும் நோக்கில் கூடுதலா 20 ஆர்டிபிசிஆர் கருவிகள் அமைக்கப்படவுள்ளன. அதில், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒன்று நிறுவப்பட்டுப் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக, கண்ணுடையான்பட்டி சிப்காட் வளாகத்தில் ஆக்சிஜன் கொள்கலன் பயன்பாட்டையும், அதைத் தொடர்ந்து கண்ணுடையான்பட்டி கிராமத்தில் "முதல்வரின் மக்களைத் தேடி மருத்துவ முகாம்" திட்டத்தின் கீழ் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு சித்த மருத்துவப் பெட்டகத்தையும் அமைச்சர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்