உவமைக் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாள்: தமிழக அரசு சார்பில் நாளை மரியாதை

By செய்திப்பிரிவு

உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாளையொட்டி, நாளை அமைச்சர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

" 'உவமைக் கவிஞர்' என்று எல்லோராலும் அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அசோக் பில்லர், மாநகராட்சி பூங்கா அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாளை (23.11.2021) காலை 9.30 மணியளவில், தமிழக அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மரியாதை செலுத்த உள்ளானர்.

உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் ராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் சிற்றூரில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் பிறந்தவர், பள்ளிப் படிப்பைச் சிறப்பான முறையில் கற்றறிந்ததோடு, சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். பாவேந்தர் பாரதிதாசனிடம் கொண்ட தீவிரப் பற்றின் காரணமாக, பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதைத் தன் பெயராக சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டு, பின்னர் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகளை வழங்கினார்.

செய்யுள் மரபு மாறாமல் எழுதி வந்தவர், உவமைகள் தருவதில் தனிப் புகழையும் பெற்றார். இதன் பொருட்டே இவர் உவமைக் கவிஞர் என்று அனைவராலும் பெருமிதத்தோடு அழைக்கப்பட்டார்.

1941ஆம் ஆண்டில் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முறையாகச் சந்தித்து அவர்பால் ஏற்பட்ட மிகுந்த அன்பின் காரணமாக, அவரது கவிதைப் பணிக்குப் பேருதவியாகவும் இருந்தார். பாவேந்தரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, அவரின் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளை உடனிருந்து மேற்கொண்டதோடு மட்டுமல்லாது அவரின் பல நூல்கள் வெளியீட்டிற்கும் துணைபுரிந்தார்.

1942ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பும் வகையில், நாடகக் குழுவை அமைத்து தந்தை பெரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ‘புரட்சிக் கவி’ நாடகத்தில் அமைச்சர் வேடமேற்று நடித்துள்ளார். அந்நாடகம் அக்காலத்தில் பெரும் பரபரப்பினையும், மிகுந்த வரவேற்பினையும் பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள், உரையாடல்கள் எழுதியுள்ளார். “அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு” மற்றும் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா” ஆகிய பாடல்கள் என்றும் மங்காத புகழ் பெற்றவை.

உவமைக் கவிஞர் சுரதாவின் முதல் நூல் ‘சாவின் முத்தம்'. 1954-ல் முத்தமிழறிஞர் கலைஞரின் ‘முரசொலி’ இதழில் தொடர்ந்து எழுதிய எழுச்சியும், வேகம்மிக்க கவிதைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 1955-ல், உலகிலேயே முதன்முறையாக கவிதை நடையிலேயே ‘காவியம்’ என்கிற வார இதழைத் தொடங்கிய பெருமை இவரையே சேரும். தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனப் பல இலக்கிய ஏடுகளும், இதழ்களையும் தொடங்கிக் கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தார்.

1969-ல் தேன்மழை என்கிற உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதை நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. 1972-ல் தமிழக அரசின் கலைமாமணி விருது, 1990ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கலைத்துறை வித்தகருக்கான ‘பாரதிதாசன் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2007ஆம் ஆண்டு கவிஞர் சுரதா எழுதிய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. மேலும் கவிஞர் சுரதாவின் புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், 29.9.2008 அன்று சென்னையில் அவரது திருவுருவச் சிலையும் கலைஞர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.

தமிழுக்கும், தமிழ் இலக்கணத்திற்கும் தனிப்பெரும் தொண்டாற்றிய சிறப்புமிக்க உவமைக் கவிஞர் சுரதாவைப் போற்றும் வகையில், அவர் பிறந்த நவம்பர் 23-ம் தேதி தமிழக அரசின் சார்பில் சிறப்புடன் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது."

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்