தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம்

By செய்திப்பிரிவு

தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் கிடைத்துள்ளது. மாணவர்களுக்கு ‘சுகாதார தூதர்’ அட்டை வழங்கியதை பாராட்டி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும்நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், தூய்மை இந்தியா இயக்கம்கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்கீழ் கடந்த 2016-ம் ஆண்டுமுதல் தேசிய அளவில் தூய்மை நகர கணக்கெடுப்பு நடத்தி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. தூய்மைப் பணியில் சிறந்து விளங்கும் நகர்ப்புற உள்ளாட்சிக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

2021-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தூர், 2-ம் இடம் பிடித்த சூரத், 3-ம் இடம் பிடித்த விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சி 43-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில், சென்னை 45-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 48 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்றிருந்தன. இதில் சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் கிடைத்துள்ளது. இத்தரவரிசையில் தமிழ்நாட்டில் இருந்து பங்கு பெற்ற சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில், சென்னை முதலிடத்தில் உள்ளது.

இந்த ஆண்டுக்கான ‘திடக்கழிவு மேலாண்மையில் புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல்' என்ற பிரிவின்கீழ் சென்னைமாநகராட்சிக்கு விருது கிடைத்துள்ளது. இந்த விருதை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா வழங்க, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.மனீஷ் பெற்றுக்கொண்டார்.

சென்னை மாநகராட்சியின் சுகாதாரக் கல்வித்துறை சார்பில் திடக்கழிவுமேலாண்மை, மக்கும் குப்பைகள் மூலம் வீட்டிலேயே இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவ, மாணவியும் மாநகராட்சியின் சுகாதாரத் தூதராக செயல்பட்டு, மாநகர தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, உறுதிமொழி எடுத்தல் மற்றும் “சுகாதார தூதர்” அடையாள அட்டைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி கவுரவிக்கும் பணிகளையும் மாநகராட்சி சுகாதாரக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இப்பணியை பாராட்டியே இந்த ஆண்டு, மத்திய அரசு சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் “புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல்” என்ற விருது சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்