சென்னை விமானநிலையத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டு ஹஜ் பயணம்மேற்கொள்பவர்கள் சென்னை விமானநிலையத்தில் இருந்து பயணிக்க ஏதுவாக, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு, முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் மத்தியஅரசு வெளியிட்டுள்ள `ஹஜ் 2022'அறிக்கையில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமானநிலையங்களின் பட்டியலில் சென்னை விமானநிலையத்தின் பெயர் இடம்பெறவில்லை.

கடந்த 2019-ல் தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் இருந்து 4,500-க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள், சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்துள்ளனர். மேலும், கர்நாடகா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த ஹஜ் பயணிகளும், சென்னை விமானநிலையத்தில் இருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கொச்சி விமானநிலையம்

தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஏறும் இடமாக தற்போது கேரளாவில் உள்ள கொச்சிவிமானநிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். மேலும், இது தொடர்பாக எனக்கு ஏராளமான கோரிக்கைகள் இஸ்லாமிய சமூகத்தினர், பொதுமக்கள், பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வந்துள்ளது.

ஹஜ் யாத்திரை பெரும்பாலான பயணிகளுக்கு சவாலாக உள்ள நிலையில், சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீ. தொலைவில் உள்ளகொச்சி நகரை புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டதை மாற்றி, பயணிகளுக்கு பலனளிக்கும் வகையில், நாட்டின் 4-வது பெரு நகரமாக உள்ள சென்னை விமானநிலையத்தில் இருந்து வழக்கம்போல புறப்பட்டுச் செல்லும் வகையில் அனுமதிஅளிக்க தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

விண்ணப்பிக்க அழைப்பு

சிறுபான்மையினர் நலத் துறைசெயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022-ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும், தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்திய ஹஜ் குழு சார்பாக விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், தகுதியான அளவுகோல்கள் மற்றும் சவுதி அரேபிய அரசால் கட்டாயமாக்கப்பட்ட கரோனாதொற்று தடுப்பு நிபந்தனைகளுடன், சிறப்பு சூழ்நிலைகளின் கீழ் ஹஜ்பயணம் நடைபெறும். இந்த பயணத்தின் முழு செயல்முறைகளும் சவுதி அரேபிய அரசின் இறுதி வழிகாட்டுதலுக்கு உட்பட்டது. எனவே, விண்ணப்பத்தை நிரப்பும்போது, விதிமுறைகளை கவனமாகப் படிக்க வேண்டும்.

இணையவழியில் மட்டுமே...

தகுதியுள்ள நபர்கள் வரும் ஜனவரி 31-ம் தேதி வரை www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அல்லது இந்திய ஹஜ் குழுவின் HCOI என்ற செயலி மூலமும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். பயணத்துக்கான விண்ணப்பம் இணையவழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், ஹஜ் பயணம் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் போட்டிருக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

இந்தியா

42 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

51 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்