தற்கொலை வேண்டாம்; நல்லாட்சி மலர நம்பிக்கையோடு காத்திருங்கள்: விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் விவசாயிகளைப் போற்றிப் பாதுகாக்கும் நல்ல ஆட்சி மலரும் என்ற நம்பிக்கையோடு காத்திருங்கள், கடன் பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என திமுக தலைவர் கருணாநிதி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்திலே உள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த அ.தி.மு.க. ஆட்சியினால் கடந்த ஐந்தாண்டு காலமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு, அல்லலுற்று வருகிறார்கள் என்ற போதிலும், தமிழகத்திலே உள்ள விவசாயிகள் மிகப் பெரும் கொடுமைகளுக்குத் தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் சார்பில் எத்தனையோ போராட்டங்களை நடத்திய போதும் இந்த ஆட்சியினர் அவர்களுடைய போராட்டங்களையோ, மனப் புழுக்கத்தையோ, பொங்கி எழும் உணர்வுகளையோ கண்டு கொள்வதில்லை.

அந்தக் கொடுமையின் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், சோழன்குடிக்காடு கிராமத்தில், கோவிந்தன் மகன் பாலன் என்ற நடுத்தர விவசாயி 2011ஆம் ஆண்டில், கோட்டக் மகேந்திரா என்ற தனியார் நிறுவனத்திடம் 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் அடிப்படையில் டிராக்டர் வாங்கியிருக்கிறார்.

அந்தக் கடனை, தனது வேளாண்மை வருமானத்தின் மூலமாக 6 தவணையாக 4 லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய் இதுவரை திருப்பிக் கட்டி விட்டார்.

தற்போது விவசாய வருமானம் கடந்த சில ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு தவணை பாக்கியிருக்கிறது. இதற்கு எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல், 5-3-2016 அன்று பாப்பாநாடு காவல் துறையினர் உதவியோடு குண்டர்களுடன் மேற்படி நிறுவனத்தார் வந்து விவசாயி பாலனைக் கடுமையாகத் தாக்கியதோடு, டிராக்டரையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் காவல் துறையினர் வரம்பு மீறி நடந்து கொண்டிருக்கிறார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இது போலவே அரியலூர் அருகே விவசாயி ஒருவர் கடன் பாக்கியை கட்டாததால், தனியார் நிதி நிறுவனம் அவருடைய டிராக்டரைப் பறிமுதல் செய்து விட்டது என்ற துயரத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அரியலூர் மாவட்டத்தில் ஒரத்துhர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அழகர் என்பவர் 26 வயதே நிரம்பிய விவசாயி. கடந்த இரண்டாண்டு களுக்கு முன்பு பெரம்பலுhரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடன் 7 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார்.

இதில் 5 லட்சம் ரூபாய் வரை திரும்பச் செலுத்தியுள்ளார். விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக குறிப்பிட்ட தேதிக்குள் கடனை முடிக்கவில்லை. தனியார் நிதி நிறுவனத்தின் சார்பில் அழகரிடம் சென்று தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கின்றனர்.

டிராக்டரை பறிமுதல் செய்தும் எடுத்துச் சென்று விட்டனர். அந்த வேதனையில் விவசாயி அழகர் பூச்சி மருந்தை வாங்கிக் குடித்து விட்டு இறந்திருக்கிறார்.

தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியில் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் விவசாயப் பெருங்குடி மக்களையெல்லாம் நாம் மிகுந்த உரிமையோடு கேட்டுக் கொள்வது என்னவென்றால், பொறுத்தது எல்லாம் பொறுத்து விட்டீர்கள், இன்னும் இரண்டு மாதக் காலம். பொதுத் தேர்தல் வருகிறது.

நம்பிக்கையோடு காத்திருங்கள்; விவசாயிகளைப் போற்றிப் பாதுகாக்கும் நல்ல ஆட்சி மலரும். அப்போது உங்கள் துயரங்கள் யாவும் தீரும். அதற்குள் இப்படி தற்கொலை செய்து கொள்ளும் சோகத்திற்கொரு முடிவு கட்டுங்கள். அதுவே எனது வேண்டுகோள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்