இந்தாண்டு கல்விக் கட்டணம் இலவசம் கொளத்தூரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தாண்டு இக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்கள் முதல்வர் ஏற்பாட்டின்பேரில் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய 4 இடங்களில் பி.காம், பிபிஏ,பிசிஏ, பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய 4 பாடப் பிரிவுகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க உயர்கல்வித் துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

சென்னை கொளத்தூரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில், சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி தொடங்க திட்டமிடப்பட்டு, நடப்பு கல்வி ஆண்டிலேயே கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் சென்னை, கொளத்தூர் எவர்வின் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கல்லூரியில், இதுவரை 210 மாணவ, மாணவியர்கள் சேர்ந்துள்ளனர்.

இக்கல்லூரியில் 7 வகுப்பறைகள், 2 கணினி ஆய்வகங்கள், 1 நூலகம், கல்லூரி முதல்வர் நிர்வாக அறை, பேராசிரியர், பணியாளர்கள் அறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இக்கல்லூரியை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 10 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை முதல்வர் வழங்கினார். மேலும், இந்தாண்டு கல்லூரியில் சேரும் அனைத்து மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணம், கல்வி உபகரணங்கள் அனைத்தும் முதல்வர் ஏற்பாட்டின்படி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும், நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் - தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திகுளம் ஆகிய 3 கல்லூரிகளுக்கு, தொடர்புடைய பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறப்பட்டு தற்காலிகமாக இயங்குவதற்கு கட்டிடம் தேர்வு செய்யப்பட்டு, மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அடுத்த கல்வியாண்டில் தொடங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 mins ago

கல்வி

44 secs ago

தமிழகம்

3 mins ago

ஓடிடி களம்

10 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

59 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்