அரசின் இலவசங்களை வைத்து ஒரு சமுதாயம் வளர்ந்துவிட முடியாது: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

அரசின் இலவசங்களை வைத்து ஒரு சமுதாயம் வளர்ந்துவிட முடியாது என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.

தமிழியக்கத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழ்நாடு தோன்றல் விழா திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழியக்க தலைவரும் விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும்போது, “3 ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சொற்கள், எழுத்துக்கள் மற்றும் உச்சரிப்பு மாறாமல் உள்ள தொன்மையான மொழி, நமது தமிழ்மொழிதான். தமிழை, பொதுமக்களுக்கு கொண்டு போய் சேர்த்தது அண்ணாதுரையும், அவரது தம்பிகளும்.

கலப்படத்தில் இருந்து தமிழை பாதுகாக்க தனித்தமிழ் இயக்கம் கண்டவர் மறைமலை அடிகள். 100 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பணியை மீண்டும் நாம் தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் வடமொழி கலப்பட பெயர்தான் அதிகம் உள்ளது. அந்த இழிநிலையை கண்டறிந்து மாற்ற தமிழியக்கம் முன்வர வேண்டும். தமிழுக்கு உரிய இடத்தை தர வேண்டும். தமிழ் ஆர்வத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும்.

தமிழ் பற்றுள்ள அரசு அமைந் துள்ளது. இதனை பயன்படுத்தி தமிழுக்கும், தமிழர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். எல்லா மதத்தினர் மற்றும் நாட்டினர் ஏற்று கொள்ளக் கூடியதை திரு வள்ளுவர் சொல்லி உள்ளார். பிறப்பில் வேற்றுமை இல்லை என திருவள்ளுவர் சொன்னார். ஆனால், எப்படியோ கடந்த 1,500 ஆண்டுகளாக ஜாதி என்ற சனியன் நம்மை பிடித்துக் கொண்டது. ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும். பெரியாரும், அண்ணாதுரையும், அதை தான் சொல்லிவிட்டு போனார்கள்.

தமிழக அரசு கல்விக்காக அதிகம் செலவிடுகிறது. கல்விக்கு அதிக அக்கறை செலுத்தும் முதல் வருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். உலகில் 30 நாடுகளில் உயர்கல்வி வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இந்திய நாட்டில் உதவித் தொகை மட்டும் வழங்கப்படுகிறது. அனைத்து நிலை மாணவர்களுக்கும் பள்ளிக் கல்வி மட்டுமல்ல, உயர்கல்வியும் தரப்படும் என்ற சூழ்நிலை வர வேண்டும். அதற்கு தமிழ்நாடு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

தமிழியக்கம் சார்பில் சமூக மேம்பாட்டு குழு, பொருளாதார மேம்பாட்டு குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவானது, அனைவரது கருத்தையும் கேட்டறிந்து தமிழக அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும். அரசின் இலவசங் களை வைத்து சமுதாயம் வளர்ந்து விட முடியாது. இலவசங்கள் வேண் டாம் என சொல்லும் அளவுக்கான வளர்ச்சியை கொண்டு வர வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு வாங்கும் மக்களாட்சி என்பது நமது தென்னாட்டில்தான் உள்ளது. கேரளாவை தவிர, தென்னாட்டில் உள்ள பிற மாநிலங்களில் பணம் கொடுக்காமல் வாக்குகளை வாங்க முடியாது. நல்ல அரசு அமைய வேண்டுமானால், இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

இதையடுத்து தெற்கெல்லை மீட்புப் போராளியான கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.முத்துக் கருப்பனுக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் மற்றும் சட்டப் பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர். தமிழியக்கத்தின் நோக்கம் குறித்து பொருளாளர் வே.பதுமனார் உரையாற்றினார். மாநில செயலாளர் மு.சுகுமார், வட தமிழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.வணங்காமுடி, தென் தமிழக ஒருங்கிணைப்பாளர் மு.சிதம்பர பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொதுச் செயலாளர் அப்துல்காதர் பாராட்டுரை வழங்கினார். எழுத்தாளர் முத்து பாண்டி எழுதிய புகழ்மாலை என்ற நூலை வெளியிட்டு சட்ட பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி உரையாற்றினார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை கழகத் முன்னாள் துணை வேந்தர் சபாபதிமோகன் சிறப்புரையாற்றினார். முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் மாதவ சின்னராஜ வரவேற்றார். விழுப்புரம் மாவட்டச் செயலாளர் உலகதுரை தொகுத்து வழங்கினார். தமிழ் ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், கடலூர் மண்டலச் செயலாளர் சம்பத்து நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 mins ago

வணிகம்

19 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்