இயலாதவர்களுக்கும் இயற்கைக்கும் சேவை: கோவை கால்டாக்ஸி டிரைவரின் கருணை நிறைந்த மனம்

By குள.சண்முகசுந்தரம்

‘மரத்தை வெட்டாதீர்கள் என்று வெறும் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, முடிந்தவரை மரக் கன்றுகளை நட்டுப் பழகுங்கள்’என்கிறார் கால்டாக்ஸி டிரைவரான முருகன். கோவை பகுதியில் இவர் நட்டு வளர்த்திருக்கும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பத்தாயிரம்.

சென்னை சூளைமேடு ஏரியாவைச் சேர்ந்தவர் முருகன். 1992-ல் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தவர், குடிகாரத் தந்தையின் இம்சை தாங்காமல் வீட்டிலிருந்து 300 ரூபாயை எடுத்துக் கொண்டு கிளம்பினார். கண்காணாத் தூரத்தில் போய் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் முருகனுக்குள் அப்போது இருந்த எண்ணம். கையில் இருந்த காசெல்லாம் கரைந்து முடிந்தபோது, கோவை சிறுமுகையில் ஒரு பிள்ளையார் கோயிலில் படுத்துக் கிடந்தார் முருகன். பிறகு என்ன நடந்தது? அவரே விவரிக்கிறார்.

‘‘பிள்ளையார் கோயிலில் அந்த இரவில் என்னைச் சுற்றி ஆதரவற்ற வயதான பெரியவர்கள் சிலரும் படுத்திருந்தனர். அப்போது லேசாக மழை தூர ஆரம்பித்தது. அங்கிருந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர், என்னுடைய கதையைக் கேட்டு விட்டு என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்த திண்ணையில் படுக்க வைத்தார்.

அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. வயதான இந்தப் பெரியவர்களுக்கு எல்லாம் ஒரு வாழ்க்கை இருக்கும்போது, பதினாறு வயதில் நாம் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பொழுது விடிந்ததும், அங்கிருந்தவர்கள் 500 ரூபாய் வசூல் செய்து கொடுத்து என்னை சென்னைக்கே போகச் சொன்னார்கள். ‘எனக்கு பணம் வேண்டாம். ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்கள்’ என்றேன். ஓட்டலில் சப்ளையர் வேலை வாங்கிக் கொடுத்தார்கள். மூன்று மாதம், ஒரே பேன்ட், சட்டையைப் போட்டுக் கொண்டு வேலை பார்த்தேன். அதன்பிறகு கூரியர் சர்வீஸ், பேப்பர் பாய், லாட்டரிச் சீட்டு, ஊதுபத்தி சேல்ஸ் இதெல்லாம் பார்த்து விட்டு ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

ஆட்டோ ஓட்டியதும் மாதம் 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. அதில் ஒரு பகுதியை, இயலாதவர்களுக்கு சோறுபோட ஒதுக்கினேன். வாரத்தில் ஒருநாள் வீட்டில் நானே சமைத்து வீதியோரத்து ஆதரவற்றோர் 50 பேருக்கு மதிய உணவு கொடுக்க ஆரம்பித்தேன். நான் ஆட்டோ ஓட்டிய ஹார்டுவேர்ஸ் கம்பெனி முதலாளி சபீர் இமானியிடம் ‘இயலாதவங்க ளுக்கு உதவி பண்றதுக்காக இன்னும் அதிகமா வேலை செய்யணும்னு நினைக்கிறேன்’னு சொன்னேன். அவர், மேலும் மூன்று குட்டியானை வண்டிகளை வாங்கிக் கொடுத்து ‘இதில் கிடைக்கிற வருமானத்தையும் ஆதரவற்றோருக்கு சேவை செய்ய வெச்சுக்கப்பா’ என்றார்.

அத்துடன் குழிவெட்டும் மெஷின் ஒன்றையும் வாங்கிக் கொடுத்தவர், ‘கோவையில் 25 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டுட்டா இந்த மெஷின் உனக்கே சொந்தம்’ என்று சொன்னார். மளமளன்னு மரக் கன்றுகளை வைக்க ஆரம்பிச்சேன். எனக்கு ஜிம்முக்குப் போகும் பழக்கம் உண்டு. அங்கு வரும் மது அருந்தாத, புகை பிடிக்காத இளைஞர்கள் சிலரை நண்பர்களாக்கிக் கொண்டு ‘நிழல் மையம்’ என்ற அமைப்பை உருவாக்கினேன். இப்போது, கால்டாக்ஸி ஓட்டுகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தில், ஞாயிறுதோறும் கோவையில் 11 ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 600 பேருக்கு மதிய உணவு கொடுக்கிறேன்.

இந்த ஜீவன்களுக்கு இன்னும் நிறைய உதவ வேண்டும் என்பதற்காக வருஷம் 365 நாளும் உழைக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவைப் பகுதியில் 32,200 மரக் கன்றுகளை இலவசமாக வழங்கி இருக்கிறோம். நாங்களே 15 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு, அதில் பத்தாயிரம் கன்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து நிற்கின்றன. இதுமட்டுமில்லாமல், கோவையை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநகராக மாற்ற வேண்டும் என்பதற்காக 5 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

எங்களது முயற்சியால்தான் கோவையில் பிச்சைக்காரர் களுக்காக அரசு தரப்பில் ஒரு காப்பகம் தொடங்கப்பட்டது. இடையிடையே, ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்கிறோம். பெரிய அளவில் வருமானம் இல்லாவிட்டாலும் ஏதோ, இருக்கின்ற வருமானத்தை வைத்து இயலாதவர்களுக்கும் இயற்கைக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறோம்…’’ என்று சொல்லி முடித்தார் முருகன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்