தொடரும் உழவர்கள் தற்கொலை; நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

உலகுக்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் வாழ்வதற்கு வழியின்றி தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

பயிர்கள் வாடியதாலும், கடன் சுமையை தாங்க முடியாததாலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பால்ராஜ் என்ற விவசாயி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உலகுக்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் வாழ்வதற்கு வழியின்றி தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. இது ஒட்டுமொத்த நாடும் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்.

உசிலம்பட்டியை அடுத்த தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த பால்ராஜ் என்ற விவசாயி 6 ஏக்கரில் அவரைக்காய் பயிரிட்டிருந்தார். ஒரே பாசன ஆதாரமாக இருந்த விவசாயக் கிணறு வறண்டு விட்ட நிலையில், தண்ணீர் தேவையை சமாளிப்பதற்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கி இரு இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்தார். ஆனால், இரு இடங்களிலுமே தண்ணீர் கிடைக்காததால் அவரைச் செடிகள் கருகத் தொடங்கின. ஏற்கனவே பெருமளவு கடன் சேர்ந்திருந்த நிலையில் பயிரிடப்பட்ட அவரையும் கருகி விட்டதால் கடனை எப்படி அடைக்கப்போகிறோம் என்ற கவலையில் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உழவர்களின் இன்றைய நிலைக்கு பால்ராஜின் தற்கொலை ஓர் உதாரணம் மட்டும் தான். தமிழகத்தில் ஏராளமான பால்ராஜ்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவை குறித்த செய்திகள் மறைக்கப்படுவதால் உலகுக்கு தெரிவதில்லை.

கடன் தவணையை செலுத்தாததற்காக டிராக்டர் பறித்துச் செல்லப்பட்டதால் மனம் உடைந்த அழகர் என்ற விவசாயி கடந்த 12 ஆம் தேதி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சி விலகும் முன்பே பால்ராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தங்களின் பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களால் தீர்வு காண முடியாது...நஞ்சு புட்டியால் தான் தீர்வு காண முடியும் என்ற நிலைக்கு உழவர்கள் வந்திருப்பது ஆட்சியாளர்கள் அவமானப்பட வேண்டிய விஷயமாகும். உழவர்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகள் குறித்த காலத்தில் நிறைவேற்றப் பட்டிருந்தால் விவசாயிகளுக்கு இப்படி ஓர் அவலநிலை ஏற்பட்டிருக்காது என உறுதியாக கூற முடியும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இவற்றில் பெரும்பாலான தற்கொலைகளுக்கு கடன் சுமை தான் காரணம் ஆகும். இந்த உண்மைகள் அனைத்தும் தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை தவிர்க்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் அவமானங்களும் தற்கொலைகளும் தொடர்கின்றன. இதற்கு உடனடிதீர்வு காண வேண்டியது அரசுகளின் கடமையாகும்.

விவசாயிகளின் தற்கொலைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் அதற்காக இரு கட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதல்கட்டமாக பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இரண்டாவது கட்டமாக, இனி வரும் காலங்களில் வங்கிகளில் கடன் வாங்கும் உழவர்கள் அக்கடனை உரிய தேதியில் செலுத்தும் அளவுக்கு வேளாண் தொழிலில் லாபம் கிடைப்பதை உறுதி செய்வது ஆகும். இதற்கான வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உயர்தொழில்நுட்ப உத்திகள், அதிக விலை கொடுக்கும் சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றை அரசுகள் ஏற்பத்தித் தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்படும் குறைந்தபட்ச கொள்முதல் விலையும் உயர்த்தப்பட வேண்டும். இவற்றின் மூலம் தான் விவசாயிகளின் தற்கொலைகளை முழுமையாக தடுக்க முடியும்.

இதை உணர்ந்து விவசாயிகளின் அனைத்து வகைப் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவும், வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைந்த பின்னர் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர்க்கடன்களும் ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி, விளைபொருட்களுக்கு அதிக கொள்முதல் விலை கிடைக்கவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிமொழி வழங்குகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் ராமதாஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்