சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்தால் அதிமுகவில் பிளவா? - பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்ய கட்சியினர் விருப்பம்

By கி.கணேஷ்

சசிகலாவுக்கு ஆதரவான ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் கருத்து தொடர்பாக பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். சில நாட்களிலேயே சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார். பின்னர்சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்ல, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார்.

சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு ஓபிஎஸ், பழனிசாமி அணிகள் ஒன்றிணைந்தன. இருப்பினும் அக்கட்சியின் முன்னாள் எம்.பி.மைத்ரேயன் கூறியதுபோல், ‘அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை’ என்ற சூழலேநீடிக்கிறது. கட்சியில் பழனிசாமியின் கை ஓங்கிய நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் உரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பது அவரது தரப்பினரின் வருத்தமாக உள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், இரு தரப்பும் இணைந்து ஒருசில விஷயங்களில் மட்டுமே அரசுக்கு எதிராக புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். மற்ற விவகாரங்களில், ஓபிஎஸ் தனியாகவும், பழனிசாமி தனியாகவும் அறிக்கைவிட்டு, இருதரப்பின் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துகின்றனர்.

பழனிசாமி தரப்பு அதிருப்தி

இந்நிலையில், சமீபத்தில், பழனிசாமியின் ஆதரவாளரான இளங்கோவன் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து ஓபிஎஸ் கண்டுகொள்ளாதது பழனிசாமி தரப்பை மிகவும் கோபமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சசிகலாவுக்கு எதிராக முதலில் தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் மனைவியின் மறைவுக்கு சசிகலா நேரில் சென்று அவரை சந்தித்து ஆறுதல்கூறினார். இதுபோன்ற சம்பவங்களால், சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆதரவளித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தேவர் குருபூஜைக்கான கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் மதுரையில் வழங்கிய ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதைஏற்கக்கூடியது மக்கள்மனநிலையை பொருத்தது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவு எடுப்பார்கள்’’ என்றார்.

முன்னதாக சசிகலாவிடம் தொலைபேசியில் பேசியவர்களை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், பழனிசாமி நீக்கினர். இந்தநிலையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸே சசிகலா தொடர்பாக பேசியது கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதற்கிடையில் அதிருப்தி நிர்வாகிகளை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளார். இன்று தினகரன் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து திருநெல்வேலி செல்கிறார். அங்கிருந்து தேவர் குரு பூஜைக்கு செல்ல திட்டமிட்டுள்ள அவர், தென்மாவட்டங்கள், டெல்டாமாவட்டங்களில் உள்ள சில நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘அதிமுகவை பிளவுபடுத்தி அதன்மூலம் தன்னை முன்னிலைப்படுத்த சசிகலா முயற்சி செய்கிறார். அதற்கு ஆதரவாக ஓபிஎஸ் பேச்சு உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பொதுக்குழு கூட உள்ளது. ஓபிஎஸ் ஒற்றைத் தலைமையை தொடர்ந்து வலியுறுத்துவதால், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

இந்நிலையில், இருதரப்பும், தங்கள் சமுதாயத்தினர், ஆதரவாளர்களை கட்சியில் சேர்த்து தங்கள்பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

11 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்