ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையைத் தொடங்குக: கரும்பு விவசாயிகள் கோரிக்கை

By ந. சரவணன்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான அரவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி ஆலை முன்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றாம்பள்ளி அடுத்த கேத்தாண்டிப்பட்டி பகுதியில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இதில், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் முதல்வர் காமராஜரால் கடந்த 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 62 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கரும்பு அரவைக்காகக் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து அரவைக்காகக் கொண்டுவரப்படும் கரும்புகளின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதாகக் கூறி, கடந்த 3 ஆண்டுகளாக ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வரும் கரும்புகள், வெளியூர்களில் உள்ள தனியார் கரும்பு ஆலைக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

இதனால், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதனால், ஆலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கரும்பு அரவை கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாததால் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்படாமல் உள்ளது. இதைக் கண்டித்தும், கரும்பு அரவையைத் தொடங்க வேண்டும் என ஆலைத் தொழிலாளர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆலை முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அருள் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரவீந்திரன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பித் தொழிலாளர்கள் மட்டுமின்றி கரும்பு விவசாயிகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக ஆலையில் அரவைப் பணிகள் நடக்காததால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். எனவே, ஆம்பூர் சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவையைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது 50 ஆயிரம் டன் கரும்பு அரவைக்காகத் தயார் நிலையில் உள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கூடுதலாக 50 ஆயிரம் டன் கரும்பு அரவைக்காகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையைப் புனரமைக்க ரூ.10 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்காக போனஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்