முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்: 6 அதிகாரிகள் விசாரணை

By ஆர்.சிவா

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுகவின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் 6 அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சோதனை நடத்தினர்.

கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீடு, விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இச்சோதனையில், கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆவணங்களைப் பறிமுதல் செய்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீத சொத்துகளைச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கலில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாகத் தெரிவித்தவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்தபோது வரவு-செலவுகளை ஆராய்ந்ததில் இந்தத் தகவல் வெளிவந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது, சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சொல்லி, கடந்த மாதம் 27-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால், உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டி நேரில் ஆஜராக முடியாது என, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் விலக்குக் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இன்று (அக்டோபர் 25) ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் இன்று காலையில் நேரில் ஆஜராகினர். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக அவர்களிடம் 6 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலை 12 மணி அளவில் தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்