ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை: சீனியர் மாணவி சிறையில் அடைப்பு

By செய்திப்பிரிவு

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி, ராகிங் கொடுமையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக சீனியர் மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் வல்லீஸ்வரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றுகிறார். இவரது மகள் யோகலட்சுமி(19), சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்தார். வாரம் ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவார்.

யோகலட்சுமி கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே அவரை சீனியர் மாணவிகள் சிலர் ராகிங் செய்துள்ளனர். 2-ம் ஆண்டுக்கு வந்த பிறகும் 3-ம் ஆண்டு மாணவிகள் சிலர், அவரை தொடர்ந்து ராகிங் செய்துள்ளனர். இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் யோகலட்சுமி கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பெற்றோரிடம் இதுபற்றி கூறி மாணவி அழுதுள்ளார். அவர்கள் வந்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த யோகலட்சுமி, திங்கள் கிழமை மாலை விடுதியில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் மற்றும் போலீஸார் சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

யோகலட்சுமியின் தோழிகளிடம் விசாரித்தபோது, ராகிங் கொடுமையால் அவர் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. யோகலட்சுமியின் அறைக்கு அருகில் 3-ம் ஆண்டு மாணவி கோட்டீஸ்வரியின் அறை உள்ளது.

அவரும், அவரது தோழிகளும் இணைந்து யோகலட்சுமியை ராகிங் என்ற பெயரில் சித்ரவதை செய்துள்ளனர். ‘எனது தற்கொலைக்கு காரணம் கோட்டீஸ்வரிதான். அவர் செய்த கொடுமையால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என்று டைரியில் 16 பக்கத்தில் யோகலட்சுமி எழுதி வைத்திருக்கிறார். அம்மா, அப்பா என்னை மன்னிக்க வேண்டும் என்றும் டைரியில் எழுதியுள்ளார். அவரது அறையில் இந்த டைரி கிடைத்தது.

ராகிங் கொடுமையால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததால், 3-ம் ஆண்டு மாணவி கோட்டீஸ்வரியை கைது செய்திருக்கிறோம். இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் என போலீஸார் தெரிவித்தனர்.

பாத்ரூம் செல்ல விடாமல் கொடுமை

யோகலட்சுமியை பாத்ரூம்கூட செல்லவிடாமல் சீனியர் மாணவிகள் சிலர் கொடுமை செய்துள்ளனர். அவர் பாத்ரூம் போக முயன்றால் உடனே சீனியர் மாணவிகள் பாத்ரூமுக்குள் சென்று நின்று கொள்வார்களாம். பாலியல் ரீதியாகவும் அவரை சித்ரவதை செய்துள்ளனர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந் துள்ளது.

தண்டனை என்ன?

கல்வி நிறுவனத்தில் இருந்து டிஸ்மிஸ் அல்லது சஸ்பெண்ட் செய்தல், விடுதியில் இருந்து நீக்குதல், தேர்வு முடிவை நிறுத்தி வைத்தல், தேர்வு எழுத தடை விதித்தல், ரூ.25 ஆயிரம் அபராதம் என குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனமே தண்டனை கொடுக்கலாம்.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

7 mins ago

வாழ்வியல்

17 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

41 mins ago

சுற்றுச்சூழல்

47 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்