மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அதிகாரி பணியிடம் 3 ஆண்டுகளாக காலி: மதுரையில் விதிமீறல் கட்டிடக் கண்காணிப்பில் சிக்கல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சியில் மாநகர முதன்மை நகரமைப்பு அதிகாரி பணியிடம் கடந்த 3 ஆண்டுகளாக காலியாக உள்ளது.

ஒரு நகரின் வளர்ச்சியில் மாநகராட்சியின் முதன்மை நகரமைப்புப் பிரிவு முக்கியமானது. இந்தத் துறைதான், நகரில் அமையும் குடியிருப்புக் கட்டிடங்களுக்கும், வணிக ரீதியான கட்டிடங்களுக்கும் ஆய்வு செய்து அனுமதி வழங்கும்.

தற்போது 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்புக் கட்டிடங்களுக்கும், 2 ஆயிரம் சதுர அடி வரையிலான வணிக ரீதியான கட்டிடங்களுக்கும் மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது. அதற்கு மேல் சதுர அடியிலான குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதி வழங்கும்.

முன்பு, குடியிருப்புகளைப் பொறுத்தவரையில், 4 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்குத்தான் மாநகராட்சி நகரமைப்பு அனுமதி வழங்கியது. ஆனால், தற்போது மாநகராட்சி அனுமதி அங்கீகாரம், 10 ஆயிரம் சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த காலத்தில் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் முறையான ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கியதாலும், வரைபட அனுமதியை மீறிக் கட்டிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதாலுமே விதிமீறல் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

அதனால், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் நகரச் சாலைகள் ஒழுங்கற்று அமைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால், முறையான வரியும் நிர்ணயம் செய்யப்படாததால் மாநகராட்சி வருவாய் கோடிக்கணக்கில் பாதிக்கப்பட்டது.

தற்போது நகரில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள், அதனால் மாநகராட்சிக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பைப் புதிதாக வந்துள்ள மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் கண்டுபிடித்து கட்டிட அனுமதி மற்றும் வரி நிர்ணயம் உள்ளிட்டவற்றைச் சீராய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளாார்.

ஆனாலும், அவர் உத்தரவுகளைச் செயல்படுத்தி கட்டிடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் போதிய அதிகாரிகள் இல்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அதிகாரியாக இருந்த ஐ.ரெங்கநாதன் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்குப் பிறகு மதுரை மாநகராட்சிக்குப் புதிய முதன்மை நகரமைப்புப் பிரிவு அதிகாரி இதுவரை நியமிக்கப்படவில்லை. அந்தப் பொறுப்பில் அதற்கான தகுதியும், அனுபவமும் இல்லாத கீழ்நிலை அதிகாரிகளே இதுவரை பொறுப்பு அதிகாரிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அதனால், மாநகராட்சியில் புதிய வணிகக் கட்டிடங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் அனுமதி வழங்குவதில் முறையான வழிகாட்டுதல்களும், அனுமதியும் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகரமைப்பு விதிகளைப் பின்பற்றி புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சியில் 10 ஆயிரம் சதுர அடி வரை வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில், 1,500 சதுர அடி வரை அந்தந்த மண்டல அலுவலகத்திலே விண்ணப்பித்து உதவி நகரமைப்பு அதிகாரி, உதவிப் பொறியாளர் குழு ஆய்வு செய்து உதவி ஆணையரால் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

1,500 சதுர அடிக்கு மேல் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அலுவலர் ஆய்வு செய்து மாநகராட்சி ஆணையாளருக்குக் கட்டிட அனுமதி வழங்கப் பரிந்துரை செய்வார். அவர் சரிபார்த்து அனுமதி வழங்குவார்.

ஆனால், தற்போது மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அதிகாரி பணியிடம் காலியாக இருப்பதால், புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக புகார் வந்தால் அவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை.

அதனால், புதிதாக வந்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், காலியாக உள்ள மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அதிகாரி அவசியம் குறித்துக் கேட்டு, அந்தப் பணியிடத்துக்குப் புதிய அதிகாரி கேட்டு வருகிறார். அவரின் கோரிக்கையை ஏற்று கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி மதுரை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவர் இன்னும் மதுரைக்கு வராததால் நகரமைப்புப் பிரிவு ஸ்தம்பித்துள்ளது" எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்