அண்ணாமலை பல்கலை. தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்திலும், தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வரும் 346 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

மிகக்குறைந்த ஊதியத்தில் பணி செய்யும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக பணி நீக்குவது நியாயமற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 206 பணியாளர்களும், தினக்கூலி அடிப்படையில் 140 பணியாளர்களும் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதம் ரூ.3,500 முதல் ரூ.7,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தினக்கூலி பணியாளர்களுக்கு அவர்கள் பணி செய்யும் நாட்களுக்கு மட்டும் தான் ஊதியம் வழங்கப் படும். அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் தொகுப்பூதியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும் மிகவும் குறைவாகும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை விட மிகக்குறைந்த ஊதியத்தில் செம்மையாக பணியாற்றி வரும் இவர்களை பணி நீக்க அரசு வலியுறுத்துவதாகத் தெரிகிறது.

பல்கலைக்கழகத்தின் நிதிநிலையை காரணம் காட்டி, அவர்களை பணி நீக்கம் செய்யும்படி கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் நிதிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் ஆணையிட்டதாகவும், அதனடிப்படையில் அவர்களை நீக்குவது பற்றி முடிவு எடுக்க பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு சென்னையில் இன்று நடைபெறவிருப்பதாகவும் அறிகிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு கூட்டங்கள் சிறப்பு மிக்கவை. அவற்றில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் ஏராளமாக எடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய சிறப்புமிக்க ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் 346 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் முடிவு எடுக்கப்பட்டு விடக்கூடாது.

ஜனநாயக நாட்டின் அரசுகள் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. அவையும், அவற்றின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களும் மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டுமே தவிர, இருக்கும் வேலைவாய்ப்புகளை பறிக்கக் கூடாது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலிகளாக பணியாற்றி வரும் ஊழியர்கள் நீக்கம் செய்யப்படும் அளவுக்கு எந்தத் தவறும் செய்யவில்லை; தவறிழைத்தது பல்கலைக்கழக நிர்வாகம் தான்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக விதிகளின்படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் கால முறை ஊதியத்தின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சில காலத்திற்கு தற்காலிகமாக பணியாற்றிய பிறகு தான் பணி நிலைப்பு செய்யப்படுவர். இப்போது தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் அனைவரும் பல்கலைக்கழக நிர்வாகம் தனியாரிடம் இருந்த போது நியமிக்கப்பட்டவர்கள். அந்நிர்வாகம் தொடர்ந்திருந்தால் அடுத்த சில ஆண்டுகளில் இவர்கள் பணி நிலைப்பு பெற்று பெருந்தொகையை ஊதியமாக பெற்றிருப்பார்கள்.

ஆனால், 2013-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழ்நாடு அரசே எடுத்துக் கொண்ட பிறகு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அளவுக்கு அதிகமாக இருந்ததைக் காரணம் காட்டி, இவர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு மறுக்கப்பட்டு வந்தது.

பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்ட போது, அவர்களில் எவரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை. கூடுதலாக இருந்த ஆசிரியர்கள் பிற அரசு கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டனர்.

அதேபோன்ற அணுகுமுறை தான் இவர்கள் விஷயத்திலும் கடைபிடிக்கப்பட வேண்டுமே தவிர, அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது. அதுமட்டுமின்றி, கடந்த 8 ஆண்டுகளில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெற்று விட்ட நிலையில், அவர்கள் பணி செய்த இடங்களில் இப்போது தற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்களை நியமிப்பதற்கு தடை கிடையாது.

அதுமட்டுமின்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்படுவதால் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் தேவை அதிகரிக்கும். அதைக் கருத்தில் கொண்டு தற்காலிக பணியாளர்களை நீக்கம் செய்யும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிட வேண்டும். அதற்கு மாறாக அவர்களை பணி நிலைப்பு செய்ய பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 hours ago

இலக்கியம்

4 hours ago

இலக்கியம்

4 hours ago

இலக்கியம்

4 hours ago

தமிழகம்

16 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

வணிகம்

43 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்