ரவுடிகளை ஒடுக்க சட்ட மசோதா தயார்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்கும் வகையில் வரைவு சட்ட முன்வடிவு விரைந்து இயற்றப்பட்டால், காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை, அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும், ரவுடிகளால் போலீஸார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், கவலை தெரிவித்திருந்த நீதிமன்றம், ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்கக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

ரவுடிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் வைத்துப் புதிய சட்டம் எப்போது இயற்றப்படும் என்பது குறித்து பதிலளிக்க தமிழக உள்துறைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (செப். 28) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டம்' என்ற பெயரில் வரைவு மசோதா தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்புச் சட்ட வரைவு மசோதா தயாராக இருப்பதாகத் தெரிவித்ததற்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இது விரைவில் சட்டமாக இயற்றப்பட்டால் ரவுடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்